2000க்கும் அதிகமான கன்டெய்னர்களுடன் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு முதல் கப்பல் வந்தது

திருவனந்தபுரம்: விழிஞ்ஞம் வர்த்தக துறைமுகத்திற்கு சீனாவிலிருந்து 2000க்கும் அதிகமான கன்டெய்னர்களுடன் வந்த முதல் தாய் கப்பலுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் சர்வதேச வர்த்தக துறைமுகம் கட்டும் பணிகள் கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. இது இந்தியாவின் முதல் ஆழ்கடல் கன்டெய்னர் வர்த்தக துறைமுகமாகும். ரூ.8,677 கோடி செலவில் அதானி குழுமத்துடன், கேரள மற்றும் ஒன்றிய அரசுகள் இணைந்து இந்த துறைமுகத்தை கட்டியுள்ளது. தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி விழிஞ்ஞம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்த துறைமுகத்திற்கு முதலில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெரும்பாலான துறைமுகப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதல் கப்பல் நேற்று காலை விழிஞ்ஞத்திற்கு வந்தது. சான் பெர்னான் டோ என்ற இந்தக் கப்பல் உலகில் இரண்டாவது பெரிய கப்பல் நிறுவனமான மெர்சுக்கு சொந்தமானதாகும். சீனாவில் இருந்து வந்த இந்த கப்பலில் 2000த்திற்கும் அதிகமான கன்டெய்னர்கள் உள்ளன. இந்தக் கப்பலுக்கு கேரள துறைமுகத்துறை அமைச்சர் வாசவன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கப்பலுக்கு வாட்டர் சல்யூட் அளிக்கப்பட்டது.

வழக்கமான பரிசோதனைகள் முடிந்த பின்னர் இந்தக் கப்பலில் உள்ள கன்டெய்னர்கள் ராட்சத கிரேன்கள் மூலம் இறக்கப்பட்டன. இதன்பிறகு இந்த கன்டெய்னர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2ம் தேதி சீனாவிலுள்ள சியாமென் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட இந்த சரக்கு கப்பல் 9 நாளில் விழிஞ்ஞத்தை அடைந்துள்ளது. இன்று இந்த துறைமுகத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

நைஜீரியாவில் பயணிகள் வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில் 48 பேர் உயிரிழப்பு

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி