Sunday, October 6, 2024
Home » 20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டடம் கட்டினால் சுற்றுசூழல் அனுமதி பெற வேண்டும்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு

20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டடம் கட்டினால் சுற்றுசூழல் அனுமதி பெற வேண்டும்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவிப்பு

by kannappan

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 2006 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (Environmental Impact Assessment Notification)-யின் படி 20000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களின் கட்டுமான பணி துவங்கும் முன்பு சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) பெற வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 20000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் (IT Parks) மற்றும் வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கட்டுமான உரிமையாளர்களும் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environmental Impact Assessment Authority -SEIAA) யிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பின்பு, கட்டுமான பணிகள் துவங்கும் முன்பு பிரிவு 25 நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் பிரிவு 21 காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981-ன் படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு இசைவாணை (Consent to Establish) வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். வாரியத்தின் இசைவாணை பெற்ற பின்பு, கட்டுமான பணிகளை துவங்க வேண்டும். என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு தெரிவித்துள்ளது. கட்டுமானத்திற்கான இசைவாணை (CTE) வழங்கும் போது வாரியம் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கின்றது. குறிப்பாக இவ்வளாகங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரினை வாரியம் நிர்ணயத்த தர அளவிற்கு சுத்திகரிப்பு செய்வதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரினை தொடர்ந்து கண்காணிப்பு செய்வதற்கான தொடர் கண்காணிப்பு கருவி (Online Continuous Effluent Monitoring System – OCEMS) பொருத்தி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய நீர் தர கண்காணிப்பு மையத்துடன் (Water Quality Watch) மையத்துடன் இணைப்பது, திடக்கழிவுகளை முறையாக சேகரித்து கையாள்வது, மழைநீர் சேகரிப்பு வசதிகள் ஏற்படுத்தி பராமரிப்பது மற்றும் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தகுந்த ஒலி கட்டுப்பாடு கருவிகள் பொருத்துவது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதித்து இசைவாணை வழங்குகிறது. கட்டுமான பணிகள் முடிந்து, கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொடுப்பதற்கு முன்பு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இருந்து மேலே குறிப்பிட்ட நீர் மற்றும் காற்று சட்ட பிரிவுகளின் கீழ் இயக்குவதற்கான இசைவாணை (Consent to Operate) பெற வேண்டும். பின்பு, இசைவாணையில் குறிப்பிட்ட படி மாசுக்கட்டுப்பாடு சாதனங்ககளை சரிவர இயக்கபட வேண்டும். காலாவதியான இசைவாணையினை புதுப்பிக்கப்பட்டு செல்லத்தக்கதாக (valid consent) இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரிவர பராமரித்து இயக்கப்படாமல், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் அருகில் உள்ள வெள்ளநீர் வடிகால் கால்வாய்களிலும், காலி இடங்களிலும், நீர் நிலைகளிலும் வெளியேற்றப்படுவதாக புகார்கள் பெறப்படுகின்றன. மேலும் சில இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் கழிவுநீர் எடுத்துச் செல்லப்பட்டு சாலை ஓரங்கள், கால்வாய் மற்றும் நீர்நிலைகளில் விடப்படுவதாக புகார்கள் பெறப்படுகின்றன. சில குடியிருப்பு வளாகங்களில் திடக்கழிவு சரிவர மேலாண்மை செய்யாதது குறித்து புகார்கள் பெறப்படுகின்றன. இவ்வாறான செயல்பாடுகளினால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழல் மாசு அடைகின்றது,  மேலும் இந்நிகழ்வுகளை கண்டித்து தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படுகின்றன. எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கீழ்க்கண்ட அறிவிப்பினை வெளியிடுகின்றது.* 20,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981-ன் கீழ் வாரியத்திடம் இயக்குவதற்கான இசைவாணை (Consent to Operate) பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே வாரிய இசைவாணை பெற்று இருப்பின் அது புதுப்பிக்கப்பட்டு செல்லத்தக்கதாக (valid consent) இருக்க வேண்டும். 20,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு கீழ் உள்ள கட்டடங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருப்பின், அவர்களும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இசைவாணை பெறவேண்டும்.  இக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வாரியத்தால் கண்காணிக்கப்படும்.* அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, குடியிருப்போர் நல சங்கத்திடம் ஒப்படைக்கப் பெற்று இருப்பின், அக்குடியிருப்போர் நல சங்கங்கள் வாரியத்திடம் விண்ணப்பித்து இசைவாணை பெற வேண்டும்.* கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரிவர பராமரிக்கப்பட்டு தொடர்ந்து திறம்பட இயக்கப்பட வேண்டும். கழிவுநீர் வாரியம் நிர்ணயத்த தர அளவிற்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யவும், மரங்கள் வளர்ப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.* சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்கும் வண்ணம் தொடர் கண்காணிப்பு கருவி (Online Continuous Effluent Monitoring System – OCEMS) பொருத்தப்பட்டு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நீர் தர கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்பட வேண்டும்.*திடக்கழிவுகள் சரிவர சேகரித்து திடக்கழிவு மேலாண்மை விதிகள் – 2016 ன் படி மேலாண்மை செய்யப்பட வேண்டும்.* தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.மேற்கூறப்பட்ட அறிவுப்புகள் அடுக்குமாடி குடியிப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள், வணிக வளாகங்கள்ல் சரியே அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முன்னறிவிப்பு இன்றி திடீர் ஆய்வு (Surprise Inspection)  மேற்கொள்ளும் என்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை சரிவர பராமரித்து இயக்காமல் இருப்பது, திடக்கழிவு சரிவர மேலாண்மை செய்யப்படாமல் இருப்பது, செல்லத்தக்க வாரிய இசைவாணை (valid consent of the Board) இல்லாமல் இருப்பது கண்டறியப்படின், நீர் (மாசு தடுப்பு மற்றம் கட்டுப்பாடு) சட்டம் 1974, காற்று (மாசு தடுப்பு மற்றம் கட்டுப்பாடு) சட்டம் 1981  மற்றும் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 – ன் படி அந்த வளாகங்களை மூடுவதற்கும், மின் இணைப்பினை துண்டிப்பதற்கும் மற்றும் சீல் வைப்பதற்கும் வாரியம் நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும், அவ்வளாக உரிமையாளர்கள் மீது சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை (Levy of Environmental Compensation) விதிக்கப்படுவதுடன், மேற்படி சட்டங்களின் பிரிவுகளின் படி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்துள்ளது.சுத்திகரிக்கப்படாத கழிவுநீரினை டேங்கர் லாரிகள் மூலம் எடுத்துச் சென்று சாலையோரங்கள், கால்வாய்கள், நீர் நிலைகளில் வெளியேற்றப்படுவது கண்டறியப்படின், அவ்வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே, அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் மேற்கூறிய அறிவிப்புகளை கருத்தில் கொண்டு செயல்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.  …

You may also like

Leave a Comment

3 × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi