2000 நபருக்கு கொரோனா தடுப்பூசி நேரு உள்விளையாட்டரங்கில் இன்று சிறப்பு முகாம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் 160 மாநகர சுகாதார மையங்கள் மற்றும் 36 மினி கிளினிக்குகள் என மொத்தம் 196 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், வீடுகள்தோறும் சென்று காய்ச்சல் கணக்கெடுக்கும் களப்பணியாளர்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ள மருத்துவமனை செல்ல இயலாத வயது முதிர்ந்த நபர்களை அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்கு அழைத்து சென்று தடுப்பூசி செலுத்தும் வகையில் 50 நடமாடும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்கள், முன்களப்பணியாளர்கள் என மொத்தம் 4 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 20 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு 2000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் நேரு உள்விளையாட்டரங்கில் இன்று நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 முதல் 59 வயதிற்குட்பட்ட இணை நோய்கள் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி பயனடையலாம். இந்த முகாமானது காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் அரசால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையினை கொண்டு வர வேண்டும். இதில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்