20 ஆடுபுலி ஆட்டம் ஆடும் இலை கட்சியின் மாஜி அமைச்சரால் கடுப்பாகும் சின்ன மம்மி ஆட்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சின்ன மம்மிக்கு மாஜி அமைச்சர் மீது கோபம் இருக்கலாம்… அவரது ஆதரவாளர்களுக்கு என்னாச்சு… ’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘மனுநீதி  சோழன் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த இலை கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில்  மாஜி அமைச்சர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது மாஜி அமைச்சர்  பேசும்போது, கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் அழிந்து போவர்கள் என  சாபம் கொடுக்கும் வகையில் பேசினாராம். இவர் சின்ன மம்மியை தான் தாக்கி  பேசினார். அவரால் வளர்ந்தவர் அவரையே அழிந்து போவார் என்று சாபம் விடுவது எந்த விதத்தில் நியாயம். வளர்த்த கடா மார்பில் பாயுது. இதை அப்படியே விட்டுவிடக் கூடாது என்று மாஜி அமைச்சர் மீது சின்ன மம்மி ஆதரவாளர்கள் கடும் கோபத்தில்  இருக்காங்க.. மாஜி அமைச்சரான அவர், கட்சியில் ஆரம்ப காலக்கட்டத்தில் சாதாரண நிர்வாகியாக இருந்தபோது யாரால் அமைச்சராக  உயர்ந்தார் என்பது கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்களுக்கு கூட தெரியும்.. காக்கா பிடித்துதானே அமைச்சர் ஆனார்… இப்போது பிரச்னையில் சிக்கியிருப்பதற்கு யார் காரணம், எல்லாம் பணத்தாசை… இவர் சின்ன மம்மியை திட்டுவதா… மன்னைக்கு வந்தால் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று சின்ன மம்மியின் ஆதரவாளர்கள் பேசிக்கிறாங்க. ஆனால், மனுநீதி மாவட்டத்தின் மாஜி அமைச்சரோ,  சேலத்துக்காரர் அணியில் தன்னை முன்னிலைப்படுத்தி கொள்ளவே, இப்படி பேசி வருகிறார். இப்படி பேசினால் தான், தன்னை சேலத்துக்காரர்  நம்புவார் என அவர் நினைக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ இலை ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதிகாரி என்று சட்டை காலரை தூக்கியவர்கள்… இப்போது ஏன் அதிர்ச்சியில் இருக்காங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தில்  ஸ்மார்ட்சிட்டி திட்டங்கள் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது. இலை கட்சியினர் ஆட்சி  முடிகிற வேகத்தில், கமிஷனுக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அள்ளித் தெளித்த கோலத்தில்  தொடங்கினாங்க. இதனால் இலை கட்சியின் ஆட்சியில் தொடங்கிய பணிகள் எல்லாம்  முடிந்தும் வழக்கு கோர்ட்டில் தொங்கிக் கொண்டிருக்கிறதாம். ஊழல், முறைகேடு  புகார்கள் காரணமாக முடிந்த திட்டங்களையும் திறக்க முடியவில்லையாம். முத்து  நகரில் ஆய்வு செய்த செல்வமான கணக்கு குழு தலைவர் இதைச் சொல்லி  கவலைப்பட்டாராம். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையும் நடப்பதால்,  ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் ஊழல் செய்த அதிகாரிகள் எல்லாம் விறைத்துப் போய்  இருக்காங்க. நான் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரி என்று காலரை நிமிர்த்தியவர்கள் இப்போது, லஞ்ச ஒழிப்புத் துறையின் பிடி இறுகினால் ஓய்வுபெறும்  காலத்தில் வழக்கு, விசாரணை என்று மாட்டிக் கொள்வோமா என கவலையில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாடு என்றால் 300… லாரின்னா 3000 என்று யார் பூஜ்ஜியங்களை அதிகரித்து கொண்டே இருக்காங்க…’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘கோவை  மாவட்டம் அன்னூர் ஏரியாவுல மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. இப்பகுதியை  ேசர்ந்த இலைக்கட்சி நிர்வாகிகள் இருவர், வருவாய்துறை அதிகாரிகளுடன் கூட்டணி  அமைத்துக்கொண்டு வசூல் தட்டி எடுக்கின்றனர். மாட்டு வண்டியில மணல் அள்ளுனா  300 ரூபாய், லாரியில மணல் அள்ளுனா 3 ஆயிரம் ரூபாய் என லிஸ்ட் போட்டு  கரன்சி குவிக்கிறார்கள். கடத்தல்காரர்கள் யாராவது பணம் கொடுக்க மறுத்தால்,  வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, சிக்கவைத்து விடுகின்றனர்.  அவர்களும், அதிரடியாக ஆய்வு என்ற பெயரில் களத்தில் குதிக்கின்றனர். வழக்கு  பதிவுசெய்து, வாகனத்தை பறிமுதல் செய்வதுடன், பெரும்தொகை அபராதம்  விதிக்கின்றனர். இதற்கு பயந்து, கடத்தல்காரர்கள் பெரும்பாலும் சம்திங்  கொடுத்துவிட்டு தப்பி விடுகின்றனர். ஆட்சி அதிகாரத்துல இல்லாவிட்டாலும்  வசூல் குவிப்பதில் இப்பகுதியை சேர்ந்த இலைக்கட்சியினர் டாப்பில் உள்ளனர்.  இதில், ஒருவர் முன்னாள் சபையின் நாயகருக்கு வேண்டப்பட்ட நபராம். அதனால்,  போலீசும் பெரியஅளவில் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மகிழ்ச்சி எப்படி… அதிர்ச்சியாக மாறும்னு சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கிரிவலம்  மாவட்டத்துல, கலசமான ஒன்றியத்துல, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்  சார்புல, சமுதாய சுய உதவி குழு பயிற்றுனர்களை நியமிச்சிருக்காங்க. இவங்க,  மகளிர் சுய உதவிக்குழுக்கள் வளர்ச்சிக்காக கடன் உதவிகள் பெற்றுத் தர்றது.  வரவு செலவு கணக்கு பார்க்குறது, மகளிர் குழுக்கள் பெற்ற கடனை வசூலிப்பது  போன்ற பணிகளை செய்து வர்றாங்களாம். இந்நிலையில கடந்த வாரம் சமுதாய சுய  உதவிக்குழு பயிற்றுனர்களுக்கு, 15 மாத சம்பளம் ரூ.30 கே தானாம். அவர்களுடைய வங்கி  கணக்குக்கு வழங்கப்பட்டதாம். இதனால நிலுவை தொகை வந்த மகிழ்ச்சியில  பணியாளர்கள் இருந்தாங்களாம். ஒரு சில தினங்கள்ல அந்த மகிழ்ச்சி,  அதிர்ச்சியாக மாறிடுச்சாம். அதுக்கு காரணம், அந்த இயக்கத்தோட வட்டார  மேலாளரான, பெயரின் தொடக்கத்தில் சத்தியத்தை கொண்டவர் உள்பட 7 பேர் கொண்ட  ஒருங்கிணைப்பாளர் குழுவினர் தானாம். நிலுவைத் தொகை ரூ.30கே, அதுல ரூ.20கே  எங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்காங்க போல. உயர் அதிகாரிகள்  கேட்கிறாங்க, கொடுக்காவிட்டால் நீங்கள் பணியில் தொடர முடியாதுன்னு,  மிரட்டினாங்களாம். இதனால, சுயஉதவி குழு பயிற்றுனர்கள், வங்கி கணக்கில்  இருந்து ரூ.20கே எடுத்து, கொடுத்திருக்காங்க போல. இதுமட்டுமில்லாம, அந்த ஊரக  வாழ்வாதார இயக்கத்துல முறைகேடுகள் ஏராளமாக நடக்குதாம். அதோட,  பல லட்சம்  பணம் செலவு செய்ததாக பொய்யான கணக்குகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் குவிந்து வருதாம்…’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

கட்சி கண்டுகொள்ளாததால் அதிருப்தி கோஷ்டியிடம் ஐக்கியமான இலை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

இடைத்தேர்தலை புறக்கணித்து குற்றாலத்துக்கு கிளம்பிய குக்கர் பார்ட்டிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கதர் சட்டைக்காரரை தூக்க இலைக்கட்சி தலைவர் விரிக்கும் வலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா