மின் கம்பத்தில் கார் மோதியதில் 2 பெண் நடன கலைஞர்கள் பலி

*வாலிபர் படுகாயம்

ஈரோடு : ஈரோடு வில்லரம்பட்டி அருகே அதிவேகமாக சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், காரில் பயணித்த 2 பெண் நடன கலைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோடு மாணிக்கம்பாளையம் காவேரி நகரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கலைச்செல்வன் (26). இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

கலைச்செல்வனின் தந்தை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக கலைச்செல்வன் நேற்று அதிகாலை காரில் செல்ல திட்டமிட்டிருந்தார். இதையறிந்த அவரது நண்பர், கலைச்செல்வனிடம் பி.பெ.அக்ரஹாரத்தில் அவருக்கு தெரிந்த 2 பெண் நடன கலைஞர்கள் ஈரோட்டில் இருந்து கோவைக்கு செல்ல இருப்பதாகவும், அவர்களை கோவையில் இறக்கிவிடும்படியும் கூறியுள்ளார்.

இதையடுத்து கலைச்செல்வன் நேற்று அதிகாலை பி.பெ.அக்ரஹாரத்துக்கு சென்று அங்கிருந்த அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த கணபதி மனைவி சவுந்தர்யா (25), கோவை சந்திராபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்த பட்டுராஜ் மகள் ரிஜ்வானா (20) ஆகியோரை காரில் ஏற்றினார். பின்னர், அவர்களுடன் கலைச்செல்வன் ஈரோட்டில் இருந்து கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

ஈரோடு நசியனூர் சாலையில் வில்லரசம்பட்டி அருகே சென்றபோது, கார் கலைச்செல்வனின் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி, நிற்காமல் மரத்தில் மோதி, 3 முறை உருண்டு சாலையோரம் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த சவுந்தர்யா, ரிஜ்வானா ஆகிய 2 இளம்பெண்களும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு வடக்கு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்த கிரேன் வாகனம் மூலம் காரை வெளியே எடுத்து, காரின் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்த கலைச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த சவுந்தர்யா, ரிஜ்வானா ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஈரோடு வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில், கலைச்செல்வன் காரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தி, 2 பேரின் உயிரிழப்புக்கு காரணமானது தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஈரோட்டில் அதிகாலையில் கார் விபத்தில் 2 இளம்பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்: பிரதமர் மோடி

நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டினை தாதாவின் போதை பார்ட்டிக்கு அழைத்து சென்றவர் கைது

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது: ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை தகவல்