வாலிபரை கடத்தி வழிப்பறி செய்த 2 பேர் கைது ரூ.5 லட்சம் செல்போன்கள் 9 சவரன் நகை பறிமுதல்: முக்கிய குற்றவாளிக்கு வலை

அண்ணாநகர்: வாலிபரை காரில் கடத்தி நகை, செல்போன் பறித்த வழக்கில் 2 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 9 சவரன், ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 செல்போன்களை பறிமுதல் செய்து, முக்கிய குற்றவாளியை தேடி வருகின்றனர். திருச்சியை சேர்ந்தவர் முகமது அக்பர் (27). இவர் அதே பகுதியில் புர்க்கா ஷாப் நடத்தி வருகிறார். இவரது கடையில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த முகமது அல்பான் (22) பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 5ம் தேதி, ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 ஆப்பிள் செல்போன்கள் மற்றும் 9 சவரனை சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள கடையில் டெலிவரி செய்வதற்காக, திருச்சியில் இருந்து பஸ் மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார்.

அப்போது, மர்ம நபர்கள் 3 பேர் அவரிடம், தங்களை போலீஸ் என்று அறிமுகம் செய்துகொண்டு, அவரது பையை சோதனை செய்து, அதில் இருந்த செல்போன்கள் மற்றும் நகைகளுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என்று கேட்டனர். பின்னர், விசாரணை நடத்தவேண்டும் என்று கூறி, முகமது அல்பானை காரில் வண்டலூர் பகுதிக்கு அழைத்து சென்று, அவரை மிரட்டி, 10 ஆப்பிள் செல்போன்கள் மற்றும் 9 சவரன் தங்க நகையை பறித்து தப்பிச்சென்றனர். புகாரின்பேரில், கோயம்பேடு இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது முகமது அல்பானை 3 பேர் காரில் கடத்திச்செல்வது பதிவாகி இருந்தது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து விசாரித்ததில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் கார் டிரைவர் சர்புதீன் (38), இவரது கூட்டாளிகள் வசந்த்குமார் (38) மற்றும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரவீன் ஆகியோர் போலீசார் என்று கூறி கடை ஊழியரிடம் செல்போன்கள், நகையை பறித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து, சர்புதீன், வசந்த்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 10 ஆப்பிள் செல்போன்கள், 9 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். குற்றவாளியாக உள்ள பிரவீனை தேடி வருகின்றனர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு