குவைத்தில் இருந்து சென்னைக்கு பெல்ட்டில் மறைத்து கடத்திய 2.40 கிலோ தங்கம் பறிமுதல்: சென்னையை சேர்ந்த குருவி கைது


சென்னை: குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி, பரிசோதித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, சென்னையைச் சேர்ந்த ஷேக் முகமது பீர் (38) என்ற பயணி, சுற்றுலா பயணிகள் விசாவில் குவைத்துக்கு சென்று விட்டு, மறுநாளே குவைத்தில் இருந்து, சென்னைக்கு திரும்பி வந்தார். இதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, அந்த பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவர் உடமைகளை பரிசோதித்தனர். ஆனால் உடமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் அந்த பயணியை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக பரிசோதித்தனர்.

அப்போது அந்த பயணி தனது இடுப்பில் கட்டி இருந்த அகலமான பெல்ட்டுக்குள் தங்க கட்டியை பெல்ட் அளவுக்கு தட்டை ஆக்கி, மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பயணியின் பெல்ட்டுக்குள் இருந்து 2.4 கிலோ எடையுள்ள ஒரே தங்க கட்டியை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த தங்க கட்டி 24 கேரட் சுத்தமான தங்கம். அதன் சர்வதேச மதிப்பு ₹1.57 கோடி. இதையடுத்து, சுங்க அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து, மேலும் விசாரணை நடத்தினர். அதில் ஷேக் முகமது பீர், கடத்தல் குருவி என்று தெரிய வந்தது. எனவே இவரை இந்த கடத்தலுக்காக, குவைத் நாட்டிற்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து, அனுப்பி வைத்த கடத்தல் ஆசாமி யார் என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related posts

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ரூ.10 கோடியில் திறந்தவெளி அரங்கு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

7 அணிகளுக்கு எதிராக சதம்; இங்கி. வீரர் ஒல்லிபோப் விசித்திர சாதனை