துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள 2.2 கிலோ தங்கம் பறிமுதல்: ஒப்பந்த ஊழியர்கள் இருவர் சிக்கினர்

சென்னை: துபாயில் இருந்து கடத்தி வந்து சுங்கச் சோதனையில் இல்லாமல் தங்கத்தை வெளியில் எடுத்துச் செல்ல முயன்ற விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துபாயிலிருந்து தங்கத்தை கடத்தி வந்த டிரான்சிட் பயணி இலங்கைக்கு தப்பினார். இது, சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்திக் கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்து துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் தீபக் (30) உள்பட இரண்டு ஊழியர்கள், கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளை டிராலி டைப் இயந்திரத்தில் வைத்து தள்ளி வந்தனர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இருவரையும் நிறுத்தி விசாரித்தனர்.

அதோடு கழிவறைகளை சுத்தம் செய்யும் கருவிகளை சோதனையிட்டனர். அதற்குள் 3 சிறிய பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவைகளை பிரித்து பார்த்தபோது, 2.2 கிலோ தங்க பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.5 கோடி.இதையடுத்து, ஒப்பந்த ஊழியர்கள் தீபக் உள்பட இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தினர். அப்போது துபாயிலிருந்து இலங்கை செல்லும் டிரான்சிட் பயணி ஒருவர், தங்கப்பசை அடங்கிய பார்சல்களை கடத்திக் கொண்டு வந்து, விமான நிலைய கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, மற்றொரு விமானத்தில் இலங்கைக்கு சென்றுள்ளார். அந்த கடத்தல் பயணி ஏற்கனவே, விமான நிலைய ஒப்பந்த ஊழியர் தீபக்கிடம், கூறியிருந்ததால் அவர் தனது வழக்கமான காலை பணி நேரத்தை இரவு பணி நேரமாக மாற்றி, முன்னதாகவே பணிக்கு வந்து, கழிவறையில் இருந்த தங்கப் பசை பார்சல்களை எடுத்து, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச்செல்ல முயன்ற போது பிடிபட்டது தெரியவந்தது.

இதை தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீபக் உள்ளிட்ட இரு ஒப்பந்த ஊழியர்களையும், சென்னை தியாகராய நகரில் உள்ள தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் 267 கிலோ கடத்தல் தங்கம், டிரான்சிட் பயணிகளால் கடத்திக் கொண்டுவரப்பட்டு, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது அதே பாணியில் மேலும் ரூ.1.5 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கடத்தல் தங்கத்தை எடுத்துச்செல்ல முயன்ற சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Related posts

டெல்லியின் ஒரே முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்தான்: புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி பேட்டி

நிபா வைரஸ் எதிரொலி: தமிழ்நாடு எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

மணிப்பூரில் தடைகள் தளர்த்தப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு!