2 பேருக்கு ஒரே நாளில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யாறு அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை ராணிப்பேட்டையை சேர்ந்தவர் உட்பட

செய்யாறு, செப்.5: செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒரே நாளில் 2 பேருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, தண்டரை கிராமத்தை சேர்ந்தவர் எல்லம்மாள்(65). இவர் கடந்த 6 மாதங்களாக இடது முழங்கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து ஏற்பட்ட வலி காரணமாக செய்யாறில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த எலும்பு மருத்துவர் சந்திரன், எல்லம்மாளுக்கு மூட்டு தேய்மானம் அடைந்திருப்பதை கண்டறிந்தார். இதற்காக முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுறுத்தினார்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா, பொன்னம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன்(37). இவருக்கு கடந்த 5 மாதத்திற்கு முன்பு வலது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் நடக்க முடியாமல் தவித்துள்ளார். இதையடுத்து அவரை, உறவினர்கள் செய்யாறு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு மருத்துவர் சந்திரன் பரிசோதித்தபோது, வலது இடுப்பு மூட்டு எலும்பில் ரத்த ஓட்டம் முற்றிலும் நின்று செயலிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் எல்லம்மாள், அம்மையப்பன் இருவருக்கும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மலர்விழி, செய்யாறு தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் பாண்டியன் ஆகியோர் வழிகாட்டுதலின்படி எலும்பு மருத்துவர்கள் சந்திரன், விமல்ராஜ், புகழேந்தி, மயக்க மருத்துவர்கள் பிரதீபா பாரதி, விஷ்ணுபிரியா, செவிலியர்கள் தயாசேகரி, இந்திரா, கமலா ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 31ம் தேதி மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் இருவரும் மருத்துவ கண்காணிப்பில் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செய்யக்கூடிய இதுபோன்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் தற்போது செய்யாறில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts

பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகம் முன் கருப்பு பேட்ஜ் அணிந்து விஏஓ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு கல்லூரி மாணவர்களுக்கு ஹாக்கி, கபடி போட்டிகள்

குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.5000 வழங்க கேட்டு பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்