2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ₹15 லட்சம் வைப்பு தொகை

திருவாரூர், ஜூலை 3: திருவாரூர் மாவட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்காக ரூ. 15 லட்சத்திற்கான வைப்புத்தொகை ரசீதியினை பயனாளிகளிடம் கலெக்டர் சாரு வழங்கினார். திருவாரூர் மாவட்ட சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்திற்கான வைப்புத்தொகை ரசீது வழங்கும் நிகழ்ச்சி குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் 30 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.15 லட்சத்திற்கான வைப்புத்தொகை ரசீதை வழங்கி கலெக்டர் சாரு பேசியதாவது, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 2 பெண் குழந்தைகள் பிறந்த வீடுகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்குவது போல் ஆரம்பித்த திட்டமானது இப்போது படித்து 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையாக வளாந்து உள்ளது.

அதுமட்டுமின்றி தமிழக முதல்வரின் உத்தரவுபடி, அரசுப்பள்ளியில் படித்து, அரசு கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்பட்டுவருகிறது. சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண்கள் நலம் சார்ந்த பல திட்டங்கள் உள்ளது. இத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து திட்டங்கள் குறித்தும் மகளிர்கள் அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு ஏற்றவாறு உள்ள திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மகளிர்களாகிய நீங்கள் உங்களை ஆரோக்கியத்துடன் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்கால சந்ததியினருக்கு நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டுப்பிள்ளைகளை நல்ல முறையில் படிக்கவைக்க வேண்டும். எந்தவித சூழ்நிலையிலும் கல்வி இடைநிற்றல் கூடாது.பெண் குழந்தைகளுக்கு பள்ளி கல்வியோடு நிறுத்திவிடாமல், அவர்களுக்கு கல்லூரி கல்வி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். கல்லூரி படிப்பு படித்து வேலைக்கு செல்லவுள்ள பெண்களை ஊக்குவியுங்கள். பெண் குழந்தைகளை படிக்க வைத்து சமுதாயத்தை முன்னேற வழி செய்யுங்கள். அதுமட்டுமின்றி, ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளை எவ்வாறு மதிப்பது போன்ற நடத்தைகளை அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் கார்த்திகா, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாப்பாசுப்ரமணியன், ஒன்றியக்குழு தலைவர் கிளாராசெந்தில், தாசில்தார் தேவகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்