2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சக்தி அம்மன் திருவிழாவில் 14 கிராம மலைவாழ் மக்கள் சீர்வரிசையுடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம்-ஏலகிரிமலையில் சுவாரஸ்யம்

ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அம்மன் திருவிழாவில் 14 கிராம மக்கள் சக்தி அம்மனுக்கு சீர்வரிசை வழங்கி பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஏலகிரி மலையானது 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் இங்குள்ள மக்கள் ஆதிகாலம் முதல் பாரம்பரிய கலாசாரம் மாறாமல் ஒவ்வொரு கிராமத்திலும் அம்மன் கோயில் கட்டி விழா நடத்தி வருகின்றனர்.  இதனால் இவர்கள் நடத்தும் விழாக்களில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் என ஏராளமானோர் பங்கேற்று மகிழ்வர். இங்குள்ள மேட்டுக்கனியூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் சக்தி அம்மன் கோயில் அமைத்து நாள்தோறும் வணங்கியும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தியும் வழிபட்டு மகிழ்கின்றனர். மேலும், மாசி மாதம் முதல் வாரத்தில் சக்தி அம்மனுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விழா நடத்துவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு கடந்த திங்கட்கிழமை முதல் நாளன்று அம்மனுக்கு கொடியேற்றி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதனை அடுத்து 2வது நாளான செவ்வாய்க்கிழமை ஊர் மக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். 3வது தினமான நேற்று முன்தினம் ஏலகிரி மலையில் உள்ள 14 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது வேண்டுதல்படி 200க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி நீண்ட வரிசையில் அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், அம்மனுக்கு பூஜை செய்து எருமை, ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு  வழிபட்டனர். ெதாடர்ந்து, விழாவிற்கு வந்த உறவினர்களை விருந்து வைத்து உற்சாகப்படுத்தினர். பின்னர் மூன்று நாட்களும் பகல் மற்றும் இரவு நேரங்களில் நையாண்டி தெருக்கூத்து, பாட்டுக்கச்சேரி உள்ளிட்ட பாரம்பரியம் மாறாத நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்தி கண்டுகளித்தனர்.  மேலும், ஏலகிரி மலைக்கு சுற்றுலா வந்த ஏராளனமா சுற்றுலா பயணிகள் விழாவில் கலந்துகொண்டு மகிழ்ந்தனர். அதேபோல், விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை