2 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட கல்விக்கடன்ரிஷிவந்தியம் எம்எல்ஏ நடவடிக்கையால்ஒரு மணி நேரத்தில் வழங்கல்

ரிஷிவந்தியம், ஏப். 5: கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ள சின்ன கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி கனகராஜ். இவரது மகள் சுஷ்மிதா, திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார். 2ம் ஆண்டு படிக்கும் சுஷ்மிதா கல்லூரியில் சேர்வதற்கு முன்னே பகண்டை கூட்டு சாலையில் உள்ள வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதற்கு வங்கி மேலாளர் மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்கிறவங்களுக்கு கல்விக்கடன் தர இயலாது என கூறியுள்ளார். 2வது ஆண்டு கல்லூரி கட்டணம் செலுத்த பணம் இல்லாத காரணத்தினால் மாணவி சுஷ்மிதா திகைத்து நின்றார்.

இந்நிலையில், ரிஷிவந்தியத்தில் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ முன்னிலையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு வந்த மாணவி சுஷ்மிதா, தனது கல்விக்கடன் பிரச்னை குறித்து எம்எல்ஏவிடம் எடுத்துரைத்தார். உடனடியாக மாணவியை அழைத்து கொண்டு அருகில் உள்ள வங்கிக்கு சென்று ஏன் மாணவிக்கு கல்விக்கடன் தரவில்லை என மேலாளரிடம் கேட்டார். பின்னர் அவர் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமாரிடம் மாணவியின் நிலை குறித்தும் கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து ஆட்சியர், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளரிடம் தெரிவித்து, உடனடியாக மாணவிக்கு கல்விக்கடன் வழங்க அறிவுறுத்தினார்.
ஒரு மணி நேரத்தில் கல்விக்கடனை மாணவிக்கு பெற்று தந்ததையடுத்து மாணவி, எம்எல்ஏவிடம் தனது நன்றியை கண்ணீராக தெரிவித்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை