2 திருநங்கைகள், பெண் ஊழியர் சிறையில் அடைப்பு

சேலம், ஜூலை 30: சேலம் தெற்கு வட்டம் சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனி தாசில்தாராக இருப்பவர் தமிழ்முல்லை. இந்த அலுவலகத்தில் இருந்து முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் மாதந்தோறும் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் கணக்கு தணிக்கை செய்ததில் கடந்த 2020ம் ஆண்டில் ₹1கோடி அளவிற்கு மோசடி நடந்தது தெரியவந்தது. இதுபற்றி தாசில்தார் தமிழ்முல்லை அளித்த புகாரின பேரில் சேலம் மத்திய குற்றப்பிரிவுபோலீசார் விசாரணை நடத்தி, தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த பாலம்பட்டியைச் சேர்ந்த பவித்ரா (21), பஞ்சந்தாங்கி ஏரி பகுதியைச் சேர்ந்த திருநங்கை சாந்தி, குகையைச் சேர்ந்த திருநங்கை மாதம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில், சாந்தியின் வங்கி கணக்கிற்கு ₹65,78,900, பவித்ராவின் வங்கி கணக்கிற்கு ₹23,39,861, மாதம்மாள் வங்கி கணக்கிற்கு ₹8 லட்சம் வரை முறைகேடாக சென்றுள்ளதும், சாந்தி அந்த பணத்தை உறவினர்களிடம் கொடுத்து வைத்துள்ளதும், பவித்ரா தந்தை மூலம் நிலம் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. சாந்தியிடம் இருந்து ₹1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவருடன் பிறந்தவர்கள் 11 பேர். அனைவரிடமும் பணத்தை கொடுத்து வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின்னர் 3 பேர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவுபோலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் இவர்களின் வங்கி கணக்கிற்கு இவ்வளவு பணம் எந்த முறையில் சென்றது என்பது புகார் கொடுத்த அதிகாரிகளுக்கே தெரியவில்லை. இதனால் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து