2வது வார ஆடித்திருவிழா பெரியபாளையம் அம்மன் கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் வழிபாடு

 

ஊத்துக்கோட்டை, ஜூலை 31: பெரியபாளையம் அம்மன் கோயிலில் 2 வது வாரம் ஆடித்திருவிழாவில் 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பெரியபாளையத்தில் புகழ் பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஆடித்திருவிழா கடந்த 17ம் தேதி தொடங்கியது. இந்த விழா சனி, ஞாயிற்றுக்கிழமை என 14 வாரங்கள் நடைபெறும்.

இத்திருவிழாவிற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ், வேன், ஜீப், லாரி, ஆட்டோ, மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டையடித்து, வேப்பிலை ஆடை அணிந்து கோயிலை வலம் வந்து, ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவார்கள்.

அவ்வாறு ஆடித்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்காக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், பொன்னேரி, ஊத்துக்கோட்டை, மூலக்கடை, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அரசு பேருந்துகள், மாநகர பேருந்துகள், தனியார் பேருந்துகள் என நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கார் ஜீப், வேன், டிராக்டர், மாட்டு வண்டி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பெரியபாளையம் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள்.

இதனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வருகிறது. ஆடித்திருவிழா நேற்று 2வது வாரம் என்பதாலும், ஆடி மாதத்தில் 2 வது ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் நேற்று மாலை உற்சவரான பவானி அம்மன் பெரியபாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் அனைவரும் தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை