2வது இன்னிங்சில் இந்தியா 174 ரன்: தென் ஆப்ரிக்காவுக்கு 305 ரன் இலக்கு

செஞ்சுரியன்: இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், 305 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடும் தென் ஆப்ரிக்கா 94 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது. சூப்பர்ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 327 ரன் குவித்தது. தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 197 ரன்னுக்கு சுருண்டதை அடுத்து, 130 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன் எடுத்திருந்தது.ராகுல் 5 ரன், ஷர்துல் 4 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஷர்துல் 10, ராகுல் 23 ரன்னில் வெளியேற, கேப்டன் கோஹ்லி 18 ரன், புஜாரா 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஓரளவு தாக்குப்பிடித்த ரகானே 20, அஷ்வின் 14, ரிஷப் பன்ட் 34 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஷமி (1), சிராஜ் (0) அடுத்தடுத்து வெளியேற, இந்தியா 2வது இன்னிங்சில் 174 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (50.3 ஓவர்). பும்ரா 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் தலா 4, என்ஜிடி 2 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 305 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா 4ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன் எடுத்துள்ளது (40.5 ஓவர்). மார்க்ரம் 1, கீகன் பீட்டர்சன் 17, வாண்டெர் டுஸன் 11, கேஷவ் மகராஜ் 8 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் டீன் எல்கர் 52 ரன்னுடன் களத்தில் உள்ளார். இந்திய பந்துவீச்சில் பும்ரா 2, ஷமி, சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 6 விக்கெட் இருக்க, தென் ஆப்ரிக்கா வெற்றிக்கு இன்னும் 211 ரன் தேவை என்ற நிலையில், இன்று பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது….

Related posts

முதல் டெஸ்ட் கிரிக்கெட்; 2ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 308 ரன்கள் முன்னிலை!

முதல் டெஸ்ட் போட்டி; 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது வங்கதேச அணி!

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி: இந்தியா 378 ரன்களுக்கு ஆல் அவுட்