தேவரியம்பாக்கம் ஊராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கிய 5 பேருக்கு ஒரு கிலோ தக்காளி பரிசு

வாலாஜாபாத்: தேவரியம்பாக்கம் ஊராட்சியில் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து வழங்கிய 5 பேருக்கு நேற்று மாலை ஊராட்சி சார்பில் தலா ஒரு கிலோ தக்காளி சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண் திட்டத்தை மேம்படுத்தும் வகையில், இங்குள்ள வீடுகளில் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க சிவப்பு, பச்சைநிற தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துசுந்தரம், வட்டார ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அனைத்து வீடுகளிலும் பயன்படுத்துவதற்கான சிறிய வகை குப்பைத் தொட்டிகளை வழங்கினர். மேலும், ஒவ்வொரு வீடுகளிலும் நாள்தோறும் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர். முன்னதாக, தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் எந்தெந்த வீடுகளில் குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுகின்றன என்பதை ஊராட்சி அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது, ஊராட்சி தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து வழங்கிய 5 பேருக்கு தலா ஒரு கிலோ தக்காளியை ஊராட்சி மன்றத் தலைவர் அஜய்குமார் சிறப்பு பரிசாக வழங்கினார். இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இதேபோல் மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் அனைத்து வீடுகளுக்கும் ஊராட்சி சார்பில் நினைவு பரிசு வழங்கப்படும் என ஊராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை !!

ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த லாரி முன்னாள் சென்ற 5 வாகனங்கள் மீது மோதியதில் 8 பேர் காயம்

மின்சார கார் உற்பத்தி மையமாக திகழும் தமிழ்நாடு! : சென்னையில் மின்சார கார்கள் தயாரிக்க ஃபோர்டு ஆலோசனை!!