தொலைதூர கிராம மக்களும் 1962க்கு அழைத்தால் வீடு தேடி வரும் கால்நடை ஆம்புலன்ஸ்

*முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விவசாயிகள்

மேட்டுப்பாளையம் : கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் கால்நடைகள் பெரும் பங்காற்றி வருகின்றன. கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சைகளை கால்நடைகளுக்கு அளிக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் கால்நடை மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி துவக்கி வைத்தார். இதில், கோவை மாவட்டத்திற்கு ஐந்து கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் வழங்கியது.

ஆம்புலன்ஸ் சேவையை அண்மையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, கணபதி ராஜ்குமார் எம்.பி., உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். இந்த கால்நடை ஆம்புலன்ஸ்கள் காரமடை, அன்னூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு (பொள்ளாச்சி வடக்கு),ஆனைமலை வட்டாரங்களில் இயங்கி வருகின்றன.

ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு டிரைவர் (பைலட் மற்றும் உதவியாளர்) மற்றும் ஒரு கம்பவுண்டர் என பணியில் இருந்து வருகின்றனர். இந்த ஆம்புலன்ஸ் சேவை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கி வருகிறது.மதியம் 2 மணி வரை அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட கிராமங்களில் இந்த மருத்துவ ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும்.

மதியம் 2 மணிக்கு பின்னர் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் அதற்கு சிகிச்சையளிப்பது உள்ளிட்ட அவசர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இதுபோன்ற அவசர சிகிச்சை அழைப்புகள் வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று இந்த கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் சிகிச்சை அளித்து வருகிறது.

“1962” என்ற டோல் ஃப்ரீ எண்ணை அழைத்தால் தொலைபேசியில் அழைத்தால் அழைப்பு சென்னை கால் சென்டருக்கு சென்று அங்கிருந்து எந்த மாவட்டமோ, அந்த மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட இடங்களின் அருகில் உள்ள ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி கோவை மாவட்டத்தில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. அதன்படி காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஒரு நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆம்புலன்ஸ் தோலம்பாளையம், வெள்ளியங்காடு, கெம்மாராம்பாளையம், காளம்பாளையம், மருதூர், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, சிக்கதாசம்பாளையம், ஜடையம்பாளையம் பெள்ளேபாளையம், இலுப்பநத்தம், மூடுதுறை, இரும்பறை, சின்னக்கள்ளிப்பட்டி, பெள்ளாதி, சிக்காரம்பாளையம் 17 ஊராட்சிகளில் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி செலுத்துதல், மலடு நீக்க சிகிச்சைகள், ஆண்மை நீக்கம்,சினை பரிசோதனை,செயற்கை முறை கருவூட்டல்,நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சுகாதார நடவடிக்கைகளை அந்தந்த கிராமங்களில் உள்ள வீடுகளுக்கே நேரில் சென்று தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறையின் கோவை மண்டல இணை இயக்குநர் திருக்குமரன் கூறுகையில்: கோவை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள 5 கால்நடை மருத்துவ வாகனங்களில் தலா ஒரு கால்நடை மருத்துவர்,ஒரு கால்நடை உதவியாளர்,ஒரு ஓட்டுநர் பணியில் இருப்பர்.காலையில் 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தினமும் இரு கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு இந்த மருத்துவ ஆம்புலன்ஸ்கள் பணிக்கு அனுப்பப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு செல்லும் இந்த கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ்களில் செல்லும் மருத்துவர்கள் அங்கு கால்நடைகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பணிகள் மற்றும் கருவூட்டல் பணிகளை மேற்கொள்வர்.பிற்பகலில் அழைப்பு மையம் வாயிலாக பெறப்படும் அழைப்புகளில் அவசர சிகிச்சை மேற்கொள்ள வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வாகனங்களில் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகள் மட்டும் இன்றி வீட்டில் வளர்க்கப்படும் நாய்,பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளையும் மக்கள் சிகிச்சைக்காக ஆர்வத்துடன் கொண்டு வருகின்றனர்.இதுபோன்று கோவை மாவட்டத்தில் ஐந்து கால்நடை ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன.பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இந்த கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் விவசாயிகள் கூறுகையில்,“மேட்டுப்பாளையம் தாலுகாவில் மட்டும் 23,500 மாடுகள், பல்லாயிரம் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் தொலைதூர கிராமங்களில் இருந்து காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச்செல்ல வேண்டி வரும்.தற்போது இந்த ஆம்புலன்ஸ் சேவை வீடு தேடியே வருவதால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

குறிப்பாக தோலம்பாளையம், வெள்ளியங்காடு ஊராட்சிகளுக்கு உட்பட்ட செங்குட்டை, மானாறு,சொரண்டி, அத்திக்கடவு,காலனி புதூர்,பரளிக்காடு, மேல்குறவன் கண்டி,கீழ்குறவன் கண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களின் முக்கிய வாழ்வாதாரமே ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு தான் என்பதால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த ஆம்புலன்ஸ் சேவை இருக்கிறது.இந்த ஆம்புலன்ஸ் சேவை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது போன்றதொரு நல்ல திட்டத்தை கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி’’ என்றனர்.

Related posts

ரூ.60 லட்சம் வரி நிலுவை: 2 தியேட்டர்களுக்கு சீல் வைத்த சென்னை மாநகராட்சி

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ரூ.5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

தமிழாசிரியர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டுமா?: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்