19,525 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும் வகையில் சருகணி ஆறு தூர்வாரும் பணி தீவிரம்

*விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை அருகே அலவாக்கோட்டை பகுதியில் சருகணி ஆற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.சிவகங்கை அருகே அலவாக்கோட்டையில் உள்ள அலவாக் கண்மாயில் 1919ம் ஆண்டில் தடுப்பணை கட்டப்பட்டது. பெரியாறு, வைகை அணையிருந்து ஒரு போக சாகுபடிக்கு திறக்கப்படும் உபரி நீர் நாமனூர் வழியாக அலவாக்கோட்டை கண்மாயை நிரப்பும். இந்த அலவாக் கண்மாயில் இருந்து சருகணி ஆறு தொடங்குகிறது. இந்த ஆறு 11 அணைக்கட்டுகள் வழியாக 63 கி.மீ. தூரம் கடந்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் கண்மாயை அடைகிறது. இதில் சிவகங்கை மாவட்டத்தில் 23 கி.மீ. தூரம் செல்கிறது.

ஆனால் சருகணி ஆறு செல்லும் வழித்தடம் முழுமையாக சீமைகருவேல மரங்கள், செடிகள் வளர்ந்தும் அணைக்கட்டுகள் பராமரிக்கப்படாமலும் இருந்து வந்தன. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் ஆற்றின் சில பகுதிகள், ஆக்கிரமிப்பு காரணமாக ஆறு சுருங்கி, ஓடை போல் மாறியது. இதனையடுத்து ஆற்றை தூர்வார வேண்டுமென நீர் நிலம் பாதுகாப்பு இயக்கம் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதனால் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணி துறையினர் அலவாக்கோட்டை முதல் பெருங்குடி, நகரம்பட்டி, பனங்குடி வழியாக சருகணி வரை செல்லும் 23 கி.மீ., துாரமுள்ள ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை டிஜிட்டல் ஜி.பி.எஸ். கருவி மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை தொடங்கினர்.

இந்நிலையில் கடந்த வாரம் முதற்கட்டமாக அலவாக்கோட்டை கண்மாயில் சருகணி ஆறு தொடங்கும் இடத்தில் தூர்வாரும் பணியினை கலெக்டர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார். பல வருடங்களாக தண்ணீர் செய்ய செல்ல முடியாத நிலையில் இருந்த சருகணி ஆற்றினை தூர்வாருவதால் 26 கண்மாய்கள் மூலம் சுமார் 19,525 ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறவுள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து நீர் நிலம் பாதுகாப்பு இயக்கத் தலைவர் கிருஷ்ணன் கூறியதாவது: சருகணி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வேண்டும் என அரசு, மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். பின்னர் கலெக்டர் தலைமையில் பொதுப்பணி, வருவாய் துறையினர், விவசாயசங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சருகணி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் கடந்த வாரம் தூர்வாரும் பணியினை அவர் தொடங்கி வைத்தார்.

இதற்கு கலெக்டர் பொதுப்பணித்துறையினர், வருவாய்துறை, சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி நிறுவனர் சேதுகுமணன் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.
இது குறித்து வைகை பாசன சங்க பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறியதாவது: மாவட்டத்தில் 10 சிற்றாறுகள் ஓடுகின்றன. முதல் முயற்சியாக இந்த சருகணி ஆறு தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.

Related posts

ஜார்க்கண்ட் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரபல இசையமைப்பாளர் எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன் மீது வழக்கு!!