விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சம் பேர் குவிந்த மெரினாவில் ஞாயிற்றுக்கிழமை 18 டன் குப்பை அகற்றம்: பிளாஸ்டிக் பாட்டில் மட்டும் 4 டன்; மாநகராட்சி தகவல்

சென்னை: விமான சாகச நிகழ்ச்சிக்காக 15 லட்சம் பேர் குவிந்த மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 18 டன் குப்பை, பிளாஸ்டிக் பாட்டில்கள் 4 டன் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை விமான சாகச காட்சி நடந்தது. இந்த சாகச நிகழ்ச்சியை கண்டுகளிக்க லட்சக்கணக்கான மக்கள் பெருந்திரளாக திரண்டனர். 15 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் நிகழ்ச்சியை நேரில் வந்து பார்த்து சென்றதாக கூறப்படுகிறது. மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் திரண்ட நிலையில், அவர்கள் விட்டுச் சென்ற குப்பை கழிவுகளை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்தனர். அவர்களின் பணியை சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சி நடந்த மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் மட்டும் 18.5 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. அகற்றப்பட்ட குப்பையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டும் 4 டன் இருந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் மண்ணில் புதையுண்டு இருக்கும் சிறு குப்பையை அகற்ற பயன்படுத்தப்பட்டன. 128 தூய்மைப்பணியாளர்கள் குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குப்பை அகற்றப்பட்டு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு கடற்கரை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான பார்வையாளர்கள் வந்திருந்த போதிலும், நிகழ்வு முடிந்த சில மணி நேரங்களிலேயே கடற்கரை சுத்தமாக்கப்பட்டது. விமான கண்காட்சிக்கு முன்னும், பின்னும், கூட்டம் அதிகமாக இருந்த போதிலும், மெரினா கடற்கரை சுத்தமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கழிவுகளை உடனடியாக அகற்ற முக்கிய இடங்களில் 128 திறமையான பணியாளர்களை கொண்ட ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டது. அதில் 28 பணியாளர்கள் காமராஜர் சாலைக்கும், 8 பணியாளர்கள் கேலரி அருகிலும், 17 பணியாளர்கள் சர்வீஸ் சாலையிலும், 30 பணியாளர்கள் மணல் பரப்பிலும் நிறுத்தப்பட்டனர். மேலும், 45 பணியாளர்கள் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டனர். இவர்கள் உடனடியாக அங்கிருந்த கழிவுகளை அகற்றி தூய்மையாக பராமரித்தனர். சமூக ஒத்துழைப்பு மற்றும் அரசுத் துறைகள், ஊடகப் பணியாளர்கள், சிறு கடை உரிமையாளர்கள் உள்பட பல பங்குதாரர்களின் ஒத்துழைப்பால் தூய்மைப்படுத்தும் முயற்சிகள் மேலும் வலுப்பெற்றன. குடிமக்கள் கழிவுகளை அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களை கடைபிடிப்பதன் மூலம் முக்கிய பங்கு வகித்தனர்.

 

Related posts

கைத்தறி நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை: எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்

மதுராந்தகத்தில் பாழடைந்த கட்டிடத்தில் வட்டார கல்வி அலுவலகம்: புதிதாக கட்டித்தர கோரிக்கை

சிறுமிக்கு பாலியல் தொல்லை