18ம் தேதி கொட்டிய மழையின்போது துடித்த கர்ப்பிணி முட்டியளவு தண்ணீரில் நின்று பிரசவம் பார்த்த நர்ஸ்: ஏரல் அரசு மருத்துவமனையில் திக்…திக்…நிமிடங்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் 18ம் தேதி கொட்டிய மழையின்போது வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஏரல் அரசு மருத்துவமனையில் முட்டளவு தண்ணீரில் நின்று நர்ஸ் பிரசவம் பார்த்து உள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பட்டாண்டிவிளை கிராமத்தை சேர்ந்தவர் ஜோன்ஸ். இவர், தூத்துக்குடியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா (24) வாய் பேச முடியாத இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 18ம் தேதி காலையில் இவருக்கு பிரசவ வலி வந்துள்ளது.

இதையடுத்து அவரது தாய், தம்பி ஜேசுபாலின் லோடு ஆட்டோவில் மகளை டிரைவர் அருகில் உள்ள முன்பக்கம் சீட்டில் அமர வைத்து கொட்டும் மழையிலும் வெள்ள தண்ணீாிலும் தட்டுத் தடுமாறி ஏரல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். பல இடங்களில் வெள்ளம் ஓடியதால் வாகனத்தை நிறுத்திவிட்டு பொதுமக்கள் உதவியுடன் ஜேசுபால், ரம்யாவை தோளில் தூக்கி கொண்டு ஒருவழியாக ஏரல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். ஆனால் அங்கு டாக்டர்கள் இல்லாததால் மருத்துவமனையில் இருந்த நர்ஸ் ஜெயலட்சுமிக்கு தேவையான சிகிச்சையை கொடுத்துள்ளார். மின்சாரம் இல்லாத நிலையில் இன்வெ்ரட்டர் மூலம் எரிந்த ஒரு பல்ப் வெளிச்சத்தில் சிகிச்சை தரப்பட்டு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவம் பார்த்த ஜெயலட்சுமி கூறுகையில், ‘இப்படி ஒரு வெள்ளம் வரும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ரம்யாவை சிரமப்பட்டுத்தான் அழைத்து வந்தனர். வாய் பேச முடியாதவர். இடுப்பளவு தண்ணீரில் ரம்யாவை பிரசவ வார்டுக்குள் அழைத்து சென்றோம். அங்கு கட்டிலை தொடும் அளவிற்கு தண்ணீரில் நின்றபடியே பிரசவம் பார்த்தோம். கடவுளல் அருளால் சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பிறகு குளிர் ஜன்னி வந்தால் என்ன செய்வது என பயந்தோம். கட்டில் மீது நாற்காலியை போட்டு அமர வைத்து விட்டு விடிய விடிய கண் விழித்தபடி இருந்தோம். என் செல்போன் வெளிச்சத்தில் அடிக்கடி ரம்யாவை பார்த்துக் கொண்டேன்.

மறுநாள் விடிந்த பிறகு கால்வைக்க முடியாத அளவுக்கு வெள்ளம் ஓடியது. சற்று தூரத்தில் இருந்த கடைக்காரருக்கு கை சைகை மூலம் அழைத்து அவர் வீட்டில் மாடியில் தயார் செய்த உணவை ஒரு பக்கெட்டில் கயிறு கட்டி தண்ணீரில் நீந்தியபடி வந்து கொண்டு தந்தார். அதைத்தான் எல்லோரும் சாப்பிட்டோம். 3வது நாள்தான் தண்ணீர் குறைய தொடங்கியது. நாங்கள் உயிர் பிழைப்போமோ என பயந்தோம், ஆனால் இன்னொரு உயிரை காப்பாற்றவும் துணை செய்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’ என்றார். இரவு பகலாக மீட்டு பணி: தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியவில்லை. தூத்துக்குடி மாநகர பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளில் வெள்ளம் படிப்படியாக குறைந்து உள்ளது.

இதையடுத்து முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளில் பரிசல் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட நெல்லை-திருச்செந்தூர், நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-தூத்துக்குடி ஆகிய பிரதான சாலைகள் சீரமைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக மாற்றுப்பாதைகளிலும், தற்காலிக பாதைகள் வழியாகவும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஸ்ரீ வைகுண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 நாட்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் முகாமிடு மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளை இரவு பகலாக முடுக்கிவிட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் 112 இடங்களில் சாலைகளில் உடைப்பு ஏற்பட்டு அடித்துச்செல்லப்பட்ட நிலையில் 84 இடங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகள், பாலங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தூத்துக்குடியில் 82% செல்போன் டவர் சீரமைக்கப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்து உள்ளது. மாநகரில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டூ வீலர்கள் பழுதடைந்துள்ளன. இந்த டூ வீலர்களை ஒர்க்ஷாப்களிலும், ஆங்காங்கே தெருக்களின் நடுவிலும் நிறுத்தி மெக்கானிக்குகள் பழுதுபார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் மழையால் பழுதான 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டூ வீலர்களுக்கான ஏர்பில்டர், இன்ஜின் ஆயிலுக்கு தூத்துக்குடியில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்பேர்பார்ட்ஸ் விற்பனை கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் நூற்றுக்கணக்கான இடங்களில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் தொடர்ந்து நடந்து வருகிறது. வெள்ளம் குறைந்து தண்ணீர் மெல்ல, மெல்ல வடிந்து வந்தாலும், வெள்ளம் பாதித்த பகுதிகளின் மக்கள் தங்கள் குடியிருப்புகள், உடைமைகளை இழந்ததால் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

* பாம்பு கடித்து மூதாட்டி பலி
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக அணைகளில் உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. காட்டாறுகளின் வெள்ளமும் தாமிரபரணி ஆற்றில் கலந்தது. இந்த வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகள் குடியிருப்புக்குள் புகுந்தன. இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி நிருபர்களிடம் கூறுகையில், ‘பாம்பு கடித்து மூதாட்டி பலியாகி உள்ளனர். விஷ பூச்சுகள் கடித்து 43 பேர் சிகிச்சை உள்ளனர்’ என்றார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை