18வது மக்களவை நாளை முதல் கூடும் நிலையில் தற்காலிக சபாநாயகர் விவகாரத்தில் பாஜ, எதிர்கட்சிகள் மோதல் நீடிப்பு: எம்பிக்கள் பதவி ஏற்புக்கு உதவும் குழுவில் சேராமல் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு?

புதுடெல்லி: தற்காலிக சபாநாயகர் விவகாரத்தில் பாஜ, எதிர்கட்சிகள் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், தற்காலிக சபாநாயகருக்கு உதவுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் சேராமல் புறக்கணிப்பு செய்ய எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 18வது மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், நாளை நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடர் முதல்முறையாக தொடங்க உள்ளது. புதிய எம்பிக்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைப்பார். புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு ஒடிசாவை சேர்ந்த 7 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பர்த்ருஹரி மகதாப்(பாஜ) தற்காலிக சபாநாயகராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்துள்ளார்.

தற்காலிக சபாநாயகருக்கு பதவிப்பிரமாணம் செய்வதில் உதவுவதற்காக, எம்பிக்களான கொடிக்குன்னில் சுரேஷ்(காங்.), டிஆர். பாலு(திமுக), ராதா மோகன் சிங்(பாஜ),பகன் சிங் குலஸ்தே(பாஜ) சுதிப் பந்தோபாத்யாய் (திரிணாமுல்) ஆகியோரை ஜனாதிபதி நியமித்துள்ளார். தற்காலிக சபாநாயகர் விவகாரத்தில் நாடாளுமன்ற மரபுகள்,நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன.இந்த விஷயத்தில் கேரளாவை சேர்ந்த 8 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொடிக்குன்னில் சுரேஷ்க்கு தகுதி இருந்தும் அவருக்கான உரிமை புறக்கணிக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

கொடிக்குன்னில் சுரேஷ் கூறுகையில்,‘‘ தலித் என்பதால் இந்த பதவியை எனக்கு தராமல் புறக்கணித்துள்ளனர்’’ என குற்றம் சாட்டினார்.ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ,‘‘ மகதாப் தொடர்ச்சியாக 7 முறை எம்பியாக தேர்வாகி உள்ளார். 8 முறை எம்பியாகி உள்ள கொடிக்குன்னில் சுரேஷ் 1998 மற்றும் 2004ல் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவில்லை.காங்கிரசின் மிரட்டல்கள்,பொய் குற்றச்சாட்டுகளை கண்டு பயப்படமாட்டேன். தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் விதிமுறைகளையின்படி செயல்படுவேன்’’ என்றார்.

இதற்கிடையே புதிய எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதில் தற்காலிக சபாநாயகருக்கு உதவ ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட குழுவில் சேராமல் கொடிக்குன்னில் சுரேஷ், டி.ஆர்.பாலு,பந்தோபாத்யாய் ஆகியோர் புறக்கணிப்பு செய்யலாம் என்று எதிர்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. பாஜ செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா,‘‘தற்காலிக சபாநாயகர் விவகாரத்தில் வேண்டும் என்றே ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை அவமானப்படுத்துகிறது. தொடர்ந்து பழங்குடியினரை அந்த கட்சி அவமானப்படுத்தி வருகிறது. ஜனாதிபதி முர்முவையும் அவமானப்படுத்தினர்’’ என்றார்.

சிவசேனா இளைஞரணி தலைவர் ஆதித்ய தாக்கரே தனது டிவிட்டர் பதிவில்,’நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டத்தை காப்பதற்கான போராட்டம் இன்னும் முடிவடையவில்லை’ என தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் எம்பி டி.ராஜா, ‘எதிர்க்கட்சி எம்பியை தற்காலிக சபாநாயகராக எதிர்க்கட்சி எம்பியை நியமிப்பதற்கு கூட பாஜ விரும்பவில்லை. அதனால் கட்சி மாறி பாஜவுக்கு வந்து எம்பியானவரை தற்காலிக சபாநாயகராக நியமித்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

இடைத்தேர்தல்: மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை

டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி?

நீட் தேர்வு வழக்கு: ஜூலை 8-ல் விசாரணை