வரும் 18 முதல் 22ம் தேதி வரை 5 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: ஒன்றிய அரசின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு; ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற திட்டமா?

புதுடெல்லி: வரும் 18ம் தேதி முதல் 22ம் வரை 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடந்தது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளியில் கூட்டத் தொடரின் பெரும்பாலான நாட்கள் முடங்கின. ஆனாலும் அமளிக்கு இடையிலும் பல்வேறு மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. ஒன்றிய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, கூட்டத்தொடரின் கடைசி நாளிலும் இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக 3 புதிய சட்ட மசோதாக்களை ஒன்றிய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது. அதோடு காலவரையின்றி இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை 5 நாட்களுக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்படுவதாக ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று திடீரென அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டிவிட்டர் பதிவில், ‘‘செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது 17வது மக்களவையின் 13வது கூட்டத்தொடர் மற்றும் மாநிலங்களவையின் 261வது கூட்டத்தொடராகும். அமிர்த காலத்தின் இந்த முக்கியமான காலகட்டத்தில் ஆக்கபூர்வமான சந்திப்பை எதிர்பார்க்கிறோம்’’ என அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுவாக ஒரு வருடத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர், மழைக்கால கூட்டத் தொடர், குளிர்கால கூட்டத் தொடர் என 3 முறை மட்டுமே நாடாளுமன்றம் கூட்டப்படும். இதுதவிர்த்து முக்கியமான விஷயங்களுக்காக மட்டுமே சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்படுகிறது. அந்த வகையில், இந்த சிறப்பு கூட்டத் தொடர் எதற்காக கூட்டப்படுகிறது, சிறப்பு கூட்டத்தொடரின் நோக்கம் என்ன என்பது பற்றி அரசு தரப்பில் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. இதனால் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக, மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த சிறப்பு கூட்டத் தொடர் பாஜ கட்சி விரும்பும் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற கூட்டப்படுகிறதா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்பாக பொது சிவில் சட்டத்திற்கு பிரதமர் மோடி ஆதரவாக பேசினார். இதனால் மழைக்கால கூட்டத் தொடரிலேயே பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசின் மசோதாக்கள் பட்டியலில் அது இடம் பெறவில்லை. எனவே, பொது சிவில் சட்ட மசோதாவை கொண்டு வர இந்த சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்பட்டிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம், பாஜவின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதாவை கொண்டு வர கூட்டப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், அதோடு சேர்ந்து நாடு முழுவதும் அனைத்து சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடத்த பாஜ திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யவா அல்லது மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்ட மசோதா போன்ற முக்கிய மசோதாக்களை நிறைவேற்றவதற்கு இந்த கூட்டத் தொடர் கூட்டப்பட்டுள்ளதா என பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சி தலைவர்கள் எழுப்பி உள்ளனர்.

அதே சமயம், கடந்த மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடத்திற்கு நாடாளுமன்ற செயல்பாடுகள் மாற்றுவதற்காக சிறப்பு கூட்டத் தொடர் நடத்தப்படலாம் என யூகிக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று புதிய நாடாளுமன்றத்திற்கு நிர்வாக செயல்பாடுகளை மாற்ற அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் முன்கூட்டியே மக்களவை தேர்தலை நடத்துவதற்கான முயற்சியாக சிறப்பு கூட்டத்தொடரை கூட்டியிருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

* 1972ம் ஆண்டு ஆகஸ்ட் 14-15ம் தேதியில் சுதந்திரத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவை கொண்டாடுவதற்கும், 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 50ம் ஆண்டு விழாவை கொண்டாடவும் நள்ளிரவு சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடந்தது.
* இதற்கு பின் கடந்த 2017ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி ஜிஎஸ்டி அமல்படுத்த நள்ளிரவு சிறப்பு கூட்டம் நாடாளுமன்றத்தில் கூட்டப்பட்டது.
* பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு ஒருநாள் கழித்து சிறப்பு அமர்வு கூட்டப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

* முக்கிய செய்திகளை முடக்கும் முயற்சி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘‘மழைக்கால கூட்டத் தொடர்ந்து முடிந்து 3 வாரங்களுக்கு பிறகு 5 நாள் சிறப்பு அமர்வு கூட்டப்படுகிறது. இது, மும்பையில் நடக்கும் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் முற்றும் அதானி விவகாரத்தை பற்றிய செய்திகளை பின்னுக்கு தள்ளி தலைப்புச் செய்தியில் இடம் பெறுவதை நோக்கமாக கொண்டது. எப்படியிருந்தாலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழுவை நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தொடர்ந்து வலியுறுத்துவோம்’’ என கூறி உள்ளார். சிவசேனா (உத்தவ் அணி) தலைவர் பிரியங்கா சதுர்வேதி தனது டிவிட்டர் பதிவில், ‘‘விநாயகர் சதுர்த்தியின் போது சிறப்பு அமர்வு கூட்டப்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது, இந்து உணர்வுகளுக்கு எதிரானது. இந்த தேதியை முடிவு செய்தது ஆச்சரியமாக உள்ளது’’ என கூறி உள்ளார்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!