18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

சென்னை: ஐ.சி.எம்.ஆர். வழிகாட்டுதல் வழங்கிய பிறகு, 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 18 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தை வகுக்கக்கோரி நேர்வழி இயக்கம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரான டி.கணேஷ்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீல் பி.முத்துக்குமார் ஆஜராகி, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறை இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகத்தின் பதில் மனுவை தாக்கல் செய்தார். மனுவில், தமிழக முதல்வர் கடந்த மே மாதம் பிறப்பித்த உத்தரவின்படி, தொற்று பாதிக்க அதிக வாய்ப்புள்ளவர்கள், அத்தியாவசிய சேவை துறைகளை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், தொழில் நிறுவன ஊழியர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  முன்னுரிமை அடிப்படையில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 18 வயதிற்கு குறைவான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இதுவரை எந்த வழிகாட்டுதல்களையும் வழங்கவில்லை. அவ்வாறு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்போது பள்ளி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அறிக்கையை படித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஏற்கனவே பல்கலைக்கழக மானிய குழுவை எதிர்மனுதாரராக சேர்த்ததைபோல், இந்திய பார் கவுன்சில், தேசிய மருத்துவ ஆணையம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், இந்திய பார்மசி கவுன்சில் ஆகியவற்றையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை