முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி 17,574 பேர் பங்கேற்க இணைய தளத்தில் முன்பதிவு

* கலெக்டர் தகவல்

கரூர் : கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 17,574 பேர் இணையத்தில் முன்பதிவு செய்துள்ளதாக கலெக்டர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட கலெக்டர் தங்கவேல் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

மாநகராட்சி மேயர் வெ.கவிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ(அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பேசியதாவது:மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்- 2024ஐ தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, இன்று கரூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 27 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 53 வகையான போட்டிகளும் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் 10 முதல் வரும் 23 வரை பல்வேறு இடங்களில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

மாவட்ட அளவிலான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவுடன் ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட விளையாட்டு சங்கங்களுடன் விளையாட்டு போட்டி நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முன்னதாக நடத்தப்பட்டது. கரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லுரரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுப்பிரிவில் 17,574 பேர் இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 854 முதலிடம் 854 இரண்டாமிடம், 854 மூன்றாமிடம், மண்டல அளவில் 112 முதலிடம் 112 இரண்டாமிடம், 112 மூன்றாமிடம் வழங்கப்பட உள்ளது. மாவட்ட அளவிலான பரிசுத்தொகை முதலிடம் 3000, இரண்டாமிடம் 2000, மூன்றாமிடம் 1000 விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் வழங்கப்படும். மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்கு வெல்வார்கள். தனி விளையாட்டுப் போட்டிகளிலும் முதல் இடத்தை வென்றவர்கள் மாநில போட்டிக்கு செல்வார்கள். மாநில அளவிலான போட்டியில் முதலிடம் ரூ. 1,00,000 இரண்டாமிடம் 75,000 மூன்றாமிடம் 50,000 வழங்கப்படும்’ என்றார்.

பின்னர், விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கான மருத்துவ குழுவினர், அவசர கால ஊர்தி, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்ச்சியில், கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், மாணவ மாணவியர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு