165 ஏக்கரில் கோவையில் செம்மொழி பூங்கா: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

கோவை: கோவையில் ரூ.200 கோடி செலவில் 165 ஏக்கரில் செம்மொழி பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.கோவையின் புதிய அடையாளம் என்ற வகையில் செம்மொழி பூங்கா அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 165 ஏக்கரில் செம்மொழி பூங்காவிற்கான விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்) தயாரிக்கும் பணி நடக்கிறது. முதல் கட்டமாக 45 ஏக்கரில் திட்ட பணி துவக்க ஏற்பாடு செய்யப்படும். இதில் அரோமா பூங்கா, பாறை பூங்கா, தோட்டக்கலை பூங்கா, மூலிகை பூங்கா, மலர் பூங்கா என பல்வேறு பூங்கா, 11.50 ஏக்கரில் சிறுவர் பூங்கா அமைக்கப்படும். சிறப்பு அம்சமாக வரலாற்று மியூசியம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாவரவியல் நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் ஆலோசனை பெற்று பணிகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.கோவை மத்திய சிறை வளாகத்தில் செம்மொழி பூங்கா மிக பிரம்மாண்டமாக அமைய இருப்பதால் பல்வேறு தாவரங்களை நடவு செய்ய ஏற்பாடு செய்யப்படும். சில வகை மரங்களை இடம்பெயர்த்து கொண்டு வந்து அமைக்க முடியுமா என வேளாண் துறையினர் ஆலோசிக்கின்றனர். மல்டி லெவல் பார்க்கிங் திட்டமும் மைதான வளாகத்தில் அமைக்கப்படும். திட்ட அறிக்கை தயாரித்து அதற்கேற்ப இறுதி முடிவு எடுக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.சிறை வளாகத்தில் ஏற்கனவே சுமார் 30 ஏக்கரில் பல்வேறு மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதில், நிழல் தரும் மரங்களை அகற்றாமல் அப்படியே பணி நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நகரில் வேறு எங்கும் இல்லாத வகையில் உயிரியல் பூங்கா மற்றும் சிறை வளாக மரங்களில் பழம் தின்னும் வவ்வால்கள் அதிகமாக வசிக்கின்றன. இந்த வவ்வால்கள் வால்பாறை, ஆனைமலை பகுதிக்கு காலையில் இரை தேடி சென்று விட்டு மாலையில் மரங்களை தேடி வருவதாக சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தினர் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இந்த வவ்வால்களுக்காக சிறப்பு பகுதி ஏற்படுத்தவும் ஆலோசனை நடக்கிறது.சிறுவர்கள், மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள் என பல்வேறு தரப்பினரை கவரும் வகையிலான செயல் திட்டங்கள் இந்த செம்மொழி பூங்காவில் அமையும். 2 ஆண்டுகளில் செம்மொழி பூங்கா பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்….

Related posts

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே