திருவண்ணாமலையில் 5ம் தேதி சித்ரா பவுர்ணமி 1600 பஸ்கள், சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 4ம் தேதி இரவு 11.58 மணிக்கு தொடங்கி, 5ம் தேதி இரவு 11.35 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 5ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்ரா பவுர்ணமி விழா வரும் 5ம் தேதி நடக்கிறது.

இதில் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, முன்னேற்பாடு குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு துறை வாரியாக மேற்ெகாள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர் ஆய்வு நடத்தினார். மேலும், சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர், சுகாதாரம், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றை முறையாக செய்ய வேண்டும் என கலெக்டர் கேட்டு கொண்டார்.

மேலும், 4ம் தேதி இரவு 11.58 மணிக்கு தொடங்கி, 5ம் தேதி இரவு 11.35 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் அமைந்திருக்கிறது. தொடர்ந்து, 6ம் தேதி, 7ம் தேதி அரசு விடுமுறை நாட்களாகும். அதோடு, பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையாகும். எனவே, 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், அதற்கேற்றார்போல் அண்ணாமலையார் கோயிலில் தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்றார்.

மேலும், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 1,600 சிறப்பு பஸ்கள் இயக்கவும், சிறப்பு ரயில்களை இயக்கவும் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. வடக்கு மண்டல ஐஜி தலைமையில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக எஸ்பி கார்த்திகேயன் தெரிவித்தார்.

மேலும், வரும் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றும், அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இன்று திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கலெக்டர் முருகேஷ், எஸ்பி கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம், மாடவீதி, கோயில் உட்பிரகாரங்கள் உள்ளிட்ட இடங்களில் பார்வையிட்டனர்.

Related posts

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட பிறகு காசா போரை நிறுத்த மீண்டும் முயற்சி: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் வருகை

இந்தியாவுக்கு பதில் பாரத்; பிஎஸ்என்எல் லோகோ காவி நிறத்திற்கு மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்

தொடர் மழையால் பெங்களூருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் மீட்பு