16 இடங்களில் தணிக்கை குழுவினர் ஆய்வு

நாமக்கல், மே 18: நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும், மாநில நெடுஞ்சாலைகளில், 16 இடங்களில் சாலை பாதுகாப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில், சாலை விபத்துக்களை குறைக்க காவல்துறை, வட்டார போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை இணைந்து, பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் விபத்துகளை விட, அதிக விபத்துகள் மாநில நெடுஞ்சாலைகளில் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளை ஆய்வு செய்த போது, இது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் பகுதியை ஆய்வு செய்ய, சங்ககிரி உதவி கோட்ட பொறியாளர் தலைமையில் சாலை பாதுகாப்பு தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மற்றும் பரமத்திவேலூர் தாலுகாவில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில், மொத்தம் 16 இடங்களில், சாலை விபத்துக்கள் அதிகம் நடந்துள்ளதாக காவல்துறையினர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த இடங்களில், நெடுஞ்சாலைத்துறையை சேர்ந்த சாலை பாதுகாப்பு தணிக்கை குழுவை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டபொறியாளர்கள் அசோக்குமார், வரதராஜன், உதவி பொறியாளர் கீர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பீச்சம்பாளையம் முதல் பரமத்தி வரை அமைந்துள்ள மாநில நெடுஞ்சாலையை குழுவினர் ஆய்வு செய்து, அந்த இடங்களில் விபத்து அதிகம் நடப்பதற்கான காரணங்களை காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது பரமத்தி டிஎஸ்பி கலையரசன், எஸ்ஐ ஜவஹர் ஆகியோர் சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் பகுதிகள், காரணங்களை விளக்கினர். இதையடுத்து அந்த பகுதியில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். கடந்த 2 நாட்களாக குறிப்பிட்ட 16 இடங்களிலும் சாலை பாதுகாப்பு தணிக்கை குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து முடித்துள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சாலை விபத்துக்கள் நிகழாமல் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படும். அதன் ஒரு பகுதியாக, சாலையில் உள்ள குறைபாடுகள் போக்கப்படும். சாலையில் சரியான வெளிச்சம் இல்லாமல் இருந்தால் இரவு நேரங்களில் விபத்துக்கள் நிகழும். அத்தகைய இடங்கள் கண்டறிந்து, விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சில இடங்களில் வாகன டிரைவர்களுக்கு, சாலை தெரியாத அளவுக்கு வளைவாக இருக்கும். அதுபோன்ற இடங்களும் கண்டறிந்து, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். உயர் அதிகாரிகளின் ஒப்புதலை பெற்று, சாலை பாதுகாப்பிற்காக உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் செய்து கொடுக்கப்படும். நாமக்கல் கோட்ட நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் 16 இடங்கள் விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வு அறிக்கை, மாநில நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள குறைபாடுகளை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து