15,000 அடுக்குமாடி குடியிருப்புகளின் மறுகட்டுமானம் தனியாருக்கு நிகரான நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்படும் : அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: தனியாருக்கு நிகராக கட்டிடம் கட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 1476 குடியிருப்புதாரருக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கருணை தொகையாக ரூ.3.54 கோடி காசோலை வழங்கினர்.தொடர்ந்து, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:சென்னையில் மட்டும் 27,500 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகளை கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும், நடப்பாண்டு ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும் ஆக மொத்தம் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் 15000 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியிருப்புதாரர்கள் அனைவரும் விரைவில் இந்த குடியிருப்புகளை காலி செய்யும் பட்சத்தில் புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். 15 முதல் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட குடியிருப்புகளில் புனரமைப்பு பணிகளுக்காக மேற்கொள்ள இதுவரை ரூ.170 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த கால ஆட்சியில் குடியிருப்புகள் தரமில்லாமல் கட்டப்பட்டது, தற்போது கட்டப்படும் கட்டிடம் தனியாருக்கு நிகராக இருக்கும். கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய தனியார் தொழில்நுட்ப வல்லுநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 3 மாதத்திற்கு ஒருமுறை கட்டுமான பணிகளின் தரம் குறித்து ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பிக்கும். தற்போது கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் 50 வருட காலத்திற்கு நீடித்து நிலைத்து நிற்கும் என்றார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்த ராவ், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, எஸ்.அரவிந்த ரமேஷ் எம்எல்ஏ, அடையாறு மண்டல குழு தலைவர் ஆர்.துரைராஜ், கவுன்சிலர்கள் கே.ஆர்.கதிர்முருகன், வாரிய தலைமை பொறியாளர் ஆர்.எம்.மோகன் மற்றும் வாரிய பொறியாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு