4 கிலோ மீட்டர் தூரத்தில் 40க்கும் மேற்பட்ட விபத்து சேரன்மகாதேவி – களக்காடு சாலையில் 2 ஆண்டுகளில் 15 பேர் பலி

*தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தப்படுமா?

வீரவநல்லூர் : சேரன்மகாதேவி – களக்காடு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை பலகைகள் இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட விபத்து நடந்துள்ளது. இதில் 15 பேர் வரை விபத்தில் சிக்கி உயிரிழந்து இருக்கும் தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேரன்மகாதேவி – களக்காடு சாலை வழியாக களக்காடு, நாங்குநேரி, திருக்குறுங்குடி, வள்ளியூர், டோனாவூர், பணகுடி, நாகர்கோவில், திசையன்விளை, உவரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் இச்சாலையில் கலைக்கல்லூரி, கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், நர்சிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ஐடிஐ, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இருப்பதால் இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் பைக், கார் மற்றும் பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.

இதில் கொழுந்துமாமலை ஆர்ச் முதல் கங்கனாங்குளம் குளக்கரை வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மலையடிவாரப் பகுதியாக உள்ளது. இந்த மலையடிவாரச் சாலையில் அதிக அளவு வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளது. குறிப்பாக மான், மிளா, காட்டுப்பன்றி, முயல், உடும்பு, கீரிப்பிள்ளை போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் இங்கு வசிக்கின்றன. இதனால் இரை தேடி வரும் வனவிலங்குகள் இரவு நேரத்தில் சேரன்மகாதேவி – களக்காடு சாலையை கடக்கிறது. இவ்வாறு சாலையை கடக்கும் விலங்குகளால் இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் 40க்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளது. இதில் 15க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கடந்த வாரம் அடுத்தடுத்த 3 தினங்களில் இச்சாலையில் 100 மீட்டர் தொலைவில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் சிக்கி கங்கனாங்குளத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை, ஆலங்குளத்தை சேர்ந்த பெயின்டர், முன்னீர்பள்ளத்தை தனியார் நிதி நிறுவன ஊழியர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இதே பகுதியில் நடந்த பைக் விபத்தில் முக்கூடல் மைலப்புரத்தை சேர்ந்த அந்தோனி ஸ்டீபன் மகன் வளன் அரசு (25) என்பவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கி பலியான பள்ளி ஆசிரியையின் கணவரும் பாளை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாலையில் மின் விளக்குகள், இருளில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் இல்லாததால் டூவிலர்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக வெளியூர்களிலிருந்து வருபவர்கள் இச்சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் குறித்த அறியாமையால் விபத்தில் சிக்கி உயிரை மாய்க்கின்றனர்.

எனவே காவல்துறை மூலம் இப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட பகுதியில் பேரி கார்டுகள் அமைக்க வேண்டும், வனத்துறை மூலம் வன விலங்குகள் கடக்கும் பாதை என எச்சரிக்கும் விதமாக இரவில் ஒளிரும் வனவிலங்குகள் படம் பொறித்த எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும், பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் முறையாக மின் விளக்குகள் அமைத்து அவற்றை ஒளிரச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரவு பயணங்களை தவிர்க்கும் கிராம மக்கள்

கரிசல்பட்டியை சேர்ந்த டேவிட் ஸ்டீபன் கூறுகையில், ‘கங்கனாங்குளம் சுற்றுவட்டார பகுதியில் கரிசல்பட்டி, உலகன்குளம், பட்டங்காடு, பிள்ளைகுளம், பூதத்தான் குடியிருப்பு, புலவன்குடியிருப்பு, ஓடைக்கரை, மேல ஊப்பூரணி, கீழ உப்பூரணி, கோவிந்தபேரி, சடையமான்குளம் என பல்வேறு கிராமங்கள் உள்ளது. இதில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறோம். நாங்கள் மருத்துவம், கல்வி, அரசு அலுவலகம் என எந்த ஒரு அடிப்டை தேவைக்கும் அருகிலுள்ள சேரன்மகாதேவிக்கு இச்சாலையில் தான் தினமும் பயணித்து வருகிறோம்.

இப்பகுதியில் சாலைகள் விசாலமாக நன்றாக உள்ள நிலையில் வன விலங்குகள் நடமாட்டம் குறித்த அறிவிப்பு பலகை மற்றும் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேர பயணங்களை முடிந்தவரை தவிர்த்து வருகிறோம். எனவே எங்கள் பகுதி மக்கள் சிரமமின்றி சென்று இப்பகுதியில் மின்விளக்குகள், இரவில் ஒளிரும் எச்சரிக்கை பலகைகள் அமைத்து தர வேண்டும் என்றார்.

வாழைக்காய் லோடு லாரிகள் விபத்துக்கு காரணமா?

சேரன்மகாதேவி, வீரவநல்லூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அதிகளவு விளைநிலங்கள் உள்ளதால் இங்கு ஏத்தன் ரக வாழைகள் அதிகம் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளையும் வாழைக்காய் வெட்டி எடுத்துச் செல்லும் கேரள லாரிகள், வாழை இழை மற்றும் குலைப்பகுதியில் உள்ள தண்டு போன்றவற்றை இச்சாலையில் வண்டியை ஓரமாக நிறுத்தி கழித்து விட்டுச் செல்கின்றனர். இவ்வாறு கழிக்கப்படும் கழிவுகளை உண்பதற்காக மிளா, மான் போன்ற விலங்குகள் இரவு நேரத்தில் சாலையோரம் வருவதால் விபத்து தொடர்கதையாகிறது. எனவே வனத்துறையினர் ரோந்து சென்று இப்பகுதியில் வாழை இலைக்கழிவுகளை கொட்டும் கேரளா மற்றும் உள்ளூர் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது