15 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சீத்தாப்பழம் லோடு வேன் அதிர்ஷ்டவசமாக 3 பேர் தப்பினர் ஒடுகத்தூர் அருகே மலை கிராமத்தில்

ஒடுகத்தூர், செப்.12: ஒடுகத்தூர் அருகே மலை கிராமத்தில் 15 அடி பள்ளத்தில் லோடு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக 3 பேர் உயிர் தப்பினர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டு ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக தினை, சாமை, வரகு மற்றும் வெள்ளரிக்காய் பயிரிடுவது, மலைத்தேனை எடுத்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மேலும், மலை கிராமத்தில் விளையும் சீத்தாப்பழத்திற்கு பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனால், மலைவாழ் மக்கள் சீத்தாப்பழங்களை அறுவடை செய்து பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

சில வியாபாரிகள் நேரடியாக மலை கிராமத்திற்கு வந்து மொத்தமாக சீத்தாப்பழங்களை கொள்முதல் செய்து அதனை வேன் மூலம் எடுத்து செல்கின்றனர். பின்னர், அவற்றை வேலூர், சென்னை, பெங்களூர், திருவண்ணாமலை போன்ற நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்நிலையில், பீஞ்சமந்தை மலை கிராமத்தில் நேற்று முன்தினம் சீத்தாப்பழங்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று ஒடுகத்தூர் நோக்கி புறப்பட்டது. பின்னர், கீழே இறங்கி கொண்டிருந்த வேன் அங்குள்ள வளைவில் திரும்பிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் உட்பட 3 பேர் சிறு, சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும், வேனில் ஏற்றி வந்த சீத்தாப்பழங்கள் அனைத்தும் சிதறி சேதமானது. இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பள்ளத்தில் கவிழ்ந்த வேனை மீட்டனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திராவிடர் கழக கொடியேற்றுவிழா

கூடலூரில் மனைவி நல வேட்பு நாள் விழா

குருவாயூர் கிருஷ்ணர் கோயில் மேல் சாந்தியாக ஜித் நம்பூதிரி தேர்வு