15ம் தேதி ரோமில் வழங்கப்படுகிறது மறைசாட்சி தேவசகாயத்திற்கு புனிதர் பட்டம்; ஆரல்வாய்மொழியில் ஜூன் 5ல் நன்றி விழா

நாகர்கோவில்: கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் ஜேசுரத்தினம், விழா ஒருங்கிணைப்பாளர் ஜாண் குழந்தை ஆகியோர் நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: மறைசாட்சி தேவசகாயத்திற்கு ரோமில் வரும் 15ம் தேதி போப் பிரான்சிஸ், புனிதர் பட்டம் வழங்குகிறார். இந்த நிகழ்வில் நம் நாட்டில் இருந்து, குறிப்பாக குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறோம். உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும் ஆயிரக்கணக்கில் வந்து பங்கெடுக்கிறார்கள். தமிழக அரசின் சார்பில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். முன்னதாக மே 14ம் தேதி மாலை 3.30 மணிக்கு ரோமில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் நன்றி ஆராதனை இந்திய உயர்நிலை ஆயர் பேரவை சார்பில் நடக்கிறது. தொடர்ந்து பொதுக்கூட்டம் நடக்கிறது.இதில் கதிர்னால்கள் ஜார்ஜ் ஆலஞ்சேரி, திருவனந்தபுரம் கிளினியஸ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஒன்றிய அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் ஜாண் பர்லா உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். மே 15ம் தேதி காலை 10 மணிக்கு புனிதர் பட்ட விழா நடைபெறும் வேளையில் (இந்திய நேரப்படி மதியம் 1.30) இங்குள்ள மாதா டிவி, ஷாலோம் டிவி ஆகியவற்றில் நேரடியாக ஔிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோட்டார், குழித்துறை மறை மாவட்டம் சார்பில் 495 பேர் இந்த விழாவில் ரோமில் கலந்து கொள்கின்றனர்.மேலும் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ளவர்கள் குழுக்களாக ரோம் செல்கின்றனர். மே 15ம் தேதி காலை குமரி மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் திருப்பலியின் போது மறைசாட்சி தேவசகாயத்திற்கு ரோமில் புனிதர் பட்டம் வழங்கும் தகவலை குருக்கள் அறிவிப்பார்கள். மே 12, 13, 14 தேதிகளில் புனிதர் பட்ட முன் தயாரிப்பு வழிபாடுகள் கோட்டார், குழித்துறை மறை மாவட்ட ஆலயங்களில் நடைபெறும். தமிழகத்தின் முதல் புனிதர், இந்தியாவின் முதல் இல்லற புனிதர் என்ற நிலையை நம்முள் ஒருவர் அடைந்துள்ள நிகழ்வை கொண்டாடும் வண்ணம் மாபெரும் புனிதர் தேவசகாயத்தின் ‘‘நம்பிக்கையில் உறுதி வாழ்வுமறையில் சமத்துவம்’’ என்னும் செய்தி எல்லா மக்களுக்கும் சென்றடையவும் அகில இந்திய அளவில் மாபெரும் விழா ஜூன் 5ம் தேதி  ஆரல்வாய்மொழி, காற்றாடிமலையில் நடக்கிறது. திருத்தந்தையின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமை வகிக்கிறார். அகில இந்திய ஆயர் பேரவை தலைவர் கர்தினால் ஆஸ்வால்டு கிராசியஸ், சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலை பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி, கிழக்கிந்திய திரு அமைப்பின் பெருந்தந்தை கோவா டாமன் பேராயர் பிலிப் நேரி பெர்றாவோ, தமிழக ஆயர் பேரவை தலைவர் சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி,  மதுரை பேராயர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் நிகழ்வுகள் இரவு 7.30 மணிக்கு நிறைவு பெறும். சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்….

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு