மேக வெடிப்பால் கொட்டி தீர்த்தது சிக்கிமில் மழைக்கு 14 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

காங்டாக்: சிக்கிமில் மேக வெடிப்பால் கொட்டிய கனமழையில் இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 102 பேர் மாயமாகியுள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால், அங்குள்ள டீஸ்டா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் அங்குள்ள சுங்தாங் அணை நிரம்பும் நிலை ஏற்பட்டதால் அதிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால் நீரோட்ட பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகளில் 15 முதல் 20 அடி உயரத்துக்கு வெள்ளம் உயர்ந்து காட்டாறாய் சீறி பாய்ந்தது. ஆறுகளையொட்டி வசிப்பவர்களில் பெரும்பாலானோர் வெள்ளத்தில் சிக்கினர். கோலிடார், சிங்டாம் பகுதிகளில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 45 பேர் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர். அவர்களில் 18 பேர் காயமடைந்திருந்தனர். ஏராளமான வீடுகளும், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பல கட்டிடங்கள் வெள்ளம், சேற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

தலைநகரான காங்டாக், வெள்ளத்தால் மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டீஸ்டா நதியையொட்டிய டிக்சு, சிங்டாம், ராங்போ உள்ளிட்ட பல நகரங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பல இடங்களில் அடித்து செல்லப்பட்டுள்ளது. டீஸ்டா நதியின் குறுக்கே அமைந்துள்ள 14 பாலங்கள், சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் கனமழையால் ராணுவத்தினர், அவர்களின் கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 22 ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளனர். மேலும் 41 ராணுவ வாகனங்கள் சேற்றில் சிக்கியுள்ளன. ராணுவ வீரர்கள் தவிர, ராணுவத்தின் சாலை கட்டுமான பணி தொழிலாளர்கள் 2 உள்ளிட்ட 26 பேர் மாயமாகியுள்ளனர். அனைவரையும் தேடும் பணியில் ராணுவத்தினரும், மீட்பு படையினரும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

திடீர் கனமழை, வெள்ளத்தை பேரிடராக அறிவித்துள்ள சிக்கிம் மாநில அரசு, மீட்பு, நிவாரண பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. பல நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு நூற்றுக்கணக்கானோர் தஞ்சமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மாநில, தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் சென்று சேருவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிங்டாம் நகரத்துக்கு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் மூத்த அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தினார். அப்போது, விழிப்புடன் கண்காணிப்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மேலும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதிக்கப்பட்ட மக்களுடன் எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.

இந்த இயற்கை சவாலை எதிர்கொள்ள எங்கள் குழுக்கள் இரவு-பகலாக செயல்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார். சிக்கிமின் மங்கான், காங்டாக், பாக்யோங், நம்சி மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் வருகிற 8ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங்கை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு, கனமழை, வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சிக்கிம் மாநிலத்தில் துரதிர்ஷ்டமான இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள நிலை குறித்து முதல்வர் தமாங்கிடம் கேட்டறிந்தேன். தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தேன். பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு, நலத்துக்காக நான் பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

டார்ஜிலிங் எம்.பி. ராஜு பிஸ்தாவும் பிரதமர் மோடியை தொடர்புகொண்டு, வெள்ள நிலைமை குறித்து விளக்கினார். மாயமான ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் நலமுடன் மீட்கப்பட பிரார்த்திப்பதாக ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டீஸ்டா நதி, மேற்கு வங்காள மாநிலத்திலும், வங்காளதேசத்திலும் பாய்வதால் அங்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்துவரும் நிலையில், காலிம்பாங், டார்ஜிலிங், அலிப்பூர்துவார் மற்றும் ஜல்பைகுரி மாவட்டங்களில் பல இடங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

நேற்று வரை தெற்கு சிக்கிமில் உள்ள நம்ச்சி, நாம்தாங் ஆகிய இடங்களில் முறையே 98 மிமீ, 90.5 மிமீ மழை பெய்துள்ளது. மேலும் 3-4 நாட்களுக்கு இந்த பகுதியில் மிதமான மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கி 23 ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளன. லாச்சென் பள்ளத்தாக்கில் உள்ள ராணுவ முகாமை வெள்ளம் தாக்கியதால் அங்கிருந்த ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர். அதேபோல பொதுமக்களில் 102 பேரை காணவில்லை. அனைவரையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு ராணுவ வீரர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார். அதேபோல வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்திருக்கிறது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்