143 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருச்சி உலக மீட்பர் பசிலிக்கா சகாய அன்னை பேராலயம்

திருச்சி: திருச்சி பாலக்கரையில் வானுயர்ந்த கோபுரத்துடன் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பிரசித்தி பெற்ற உலக மீட்பர் பசிலிக்கா சகாய மாதா பேராலயம் உள்ளது. கி.பி. 1616ல் மதுரை மிஷன் திருச்சிக்கு வருகை புரிந்தது. மதுரை நாயக்கரின் தார்மீக ஆதரவு இயேசு சபை வேத போதகர்களுக்கு கிடைத்தது. மதுரையில் இருந்து நாயக்க மன்னன் திருச்சிக்கு தலைநகரையும், ஆட்சி பீடத்தையும் மாற்றினார். மன்னரின் சமஸ்தான ராணுவ அதிகாரிகள், வீரர்கள் பலர் ஏற்கனவே ராபர்ட்தே நோபிலி என்ற தத்துவ போதகரால் கிறிஸ்தவத்தை தழுவியிருந்தனர். தூய பிரான்சிஸ் சவேரியார் வழியாகவும் கிறிஸ்தவம் பரவியிருந்தது. மதுரை மறை மண்டலத்தில் திருச்சி நகர் ஒரு துணை மறைபரப்பு மையமாக இருந்து வந்தது. பாலக்கரை, இருதயபுரம், வரகனேரி ஆகிய மூன்று பகுதிகளில் கிறிஸ்தவர்கள் அதிகளவில் இருந்தனர். எனவே திருச்சி பாலக்கரை பகுதியில் புதியதோர் ஆலயம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் திருச்சி மாநகரம் திவான் கஞ்சமலை முதலியாரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அருட்தந்தை கோரிஸ், திவான் கஞ்சமலை முதலியாருக்கு செய்த நன்மைக்கு நன்றிக்கடனாக, திவான் கஞ்சமலை முதலியார் கொடுத்த இடம் தான் உலக மீட்பர் பேராலய இடமும், அதைச்சுற்றி உள்ள பகுதிகளும்.

கி.பி. 1880 பிப்ரவரி 9ம் தேதி மோர்சிங்ஞோர் கனோசு, புதிய ஆலயத்துக்கு அடிக்கல் நாட்டினார். 1881 ஜூன் 29ம் தேதி சிறப்பான முறையில் வலுவானதாகவும் ஓவியம் போன்ற கலைகள் நிறைந்தும் காண்போர் வியக்கும் வண்ணம் ஆலயம் கம்பீரமாக கட்டிமுடிக்கப்பட்டு புதுச்சேரி பேராயர் லுவெனா மூலம் கனோசு முன்னிலையில் அர்ச்சிக்கப்பட்டது. 1957ல் அருட்தந்தை ஏ.தாமஸ் பங்குதந்தையாக இருந்தபோது ரட்சகர் சபை குரு பிரான்சிஸ் மூலம், இடைவிடா சகாயத்தாயின் பக்தி முயற்சி தொடங்கப்பட்டது. சகாய அன்னையின் வழியாக ஆயிரக்கணக்கான புதுமைகள் நடைபெற தொடங்கிய காரணத்தால் பல்வேறு சமயங்களை சார்ந்த மக்களும், ஒவ்வொரு புதன்கிழமையும் இங்கு வரத்தொடங்கினர்.

2006ம் ஆண்டு பங்குதந்தையாக இருந்த அருட்திரு ஏ.கபிரியேல் முயற்சியால் திருச்சி ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா பரிந்துரையால் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் 2006 அக்டோபர் 12ம் தேதி ஆலயத்தை பசிலிக்கா(பேராலயம்) நிலைக்கு உயர்த்தினார். இத்தகைய சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தில் தினமும் காலை 6.15 மணிக்கு திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை திருப்பலியும் நடைபெறுகிறது. வாரந்தோறும் புதன் கிழமைகளில் காலை 5, காலை 6.15, முற்பகல் 11, மாலை 4.15, மாலை 5.15, 6.15 மணிக்கு திருப்பலி, நவநாள் பக்தி முயற்சி நற்கருணை ஆசீர் வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஞாயிற்று கிழமைகளில் காலை 6 மற்றும் 7.15 மணிக்கு மலையாளத்திலும் முற்பகவல் 11.45 மணிக்கு திருப்பலியும், நவநாள் பக்தி முயற்சி ஆங்கிலத்திலும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலையும் நடைபெறும்.

 

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு