1400 ஆண்டு பழமையான மகேந்திரவாடி குடைவரை கோயில் வரலாறு என்ன? வரலாற்று ஆய்வு மைய தலைவர் தகவல்

சென்னை, ஜூலை 2: அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடி பகுதியில் குடைவரை கோயில் உள்ளது. இந்த கோயில் பற்றி வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது: காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் மகேந்திரவாடி பகுதியில், மகேந்திர தடாகம் என்ற ஏரியின் கரையில், பல்லவ மன்னன் மகேந்திர விஷ்ணுவால், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் (கி.பி.6006-30) வெட்ட வெளியில் உள்ள இயற்கையான பாறையை தேர்வு செய்து, அந்த பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட வரலாற்று பொக்கிஷமே மகேந்திவாடி குடைவரை கோயில் ஆகும். அப்போதைய காலக்கட்டத்தில் மரம், உலோகம் மற்றும் சாந்து ஆகியவைதான் கோயில் கட்டுமானப் பொருட்களாக இருந்தன. இதன்மூலம் இந்த குடைவரைக் கோயில் உருவாக்கப்பட்டதால், திடமான கல்லில் நிரந்தர கற்கோயில்கள் ஏற்பட தடம் பதித்துள்ளது. இதேபோல், மண்டகப்பட்டு மற்றும் மாமண்டூரிலும் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மகேந்திரவாடி குடைவரை கோயிலானது முக மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. முக மண்டபத்தில் 2 முழு தூண்கள், 2 அரை தூண்கள் உள்ளன. இந்த தூண்கள் சதுரம், கட்டு மீண்டும் சதுரம் என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தூண்களின் நான்கு புறங்களிலும் தாமரை மலர்கள் செதுக்கப்பட்டுள்ளன. தூண்களில் உருவம் எதுவும் பதிக்கப்படவில்லை. மேலும் கோயிலின் கருவறையின் வலது மற்றும் இடது புறங்களில் துவார பாலகர்கள் உள்ளன. இதனால், கோயில் விஷ்ணுவிற்காக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என தெரியவருகிறது. ஆனால், கருவறையில் நரசிம்மர் சிலை உள்ளதால், பிற்காலத்தில் வைக்கப்பட்டதாக இருக்கலாம். மேலும், தெற்கு சதுர தூண் ஒன்றில் உள்ள கலவெட்டு பல்லவ கிரந்த எழுத்தில் உள்ளது.

அதன் விவரம் வருமாறு: ”பாறையைப் பிளந்து, குணபரர் மகேந்திரபுரம் என்னும் நகரில் மகேந்திரதடாகம் என்ற ஏரியின் கரையில் இந்த திடமான விசாலமான முராரி கோயிலை உருவாக்கினார். இக்கோயில் என்றும் மனிதக் கண்களை மகிழ்விக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு