1,394 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே பாதையை மேம்படுத்தி ரயில்களை 110 கி.மீ., வேகத்தில் இயக்க திட்டம்: 2023-24ம் நிதியாண்டுக்குள் பணிகள் முடிக்கப்படும்

* தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

சென்னை: தெற்கு ரயில்வே சார்பில், ‘‘2023-24ம் நிதியாண்டுக்குள் 1,394 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதையை மேம்படுத்தி, ரயில்களை 110 கி.மீ. வரை வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து ெதற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: இந்திய ரயில்வே துறையின் வழிகாட்டுதலின்படி, குரூப்-ஏ வழித்தடத்தில் 160 கி.மீ. வரையும், குரூப்-பி வழித்தடத்தில் 130 கி.மீ. வரையும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் பணிகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே, சென்னை சென்ட்ரல்- கூடூர், சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், ஜோலார்பேட்டை, சென்னை சென்ட்ரல்-ரேணிகுண்டா ஆகிய வழித்தடங்களில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. மொத்தம் 413 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் 130 கி.மீ. வரை வேகத்தில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவைதவிர, 1,218 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு, இப்பாதைகளில் 110 கி.மீ. வேகத்தில் விரைவுரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், 2023-24ம் நிதியாண்டுக்குள் 1,394 கி.மீ. தொலைவுக்கு பாதையை மேம்படுத்தி, ரயில்களை 110 கி.மீ. வரை வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி கொருக்குப்பேட்டை-அத்திப்பட்டு, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், கரூர்-திண்டுக்கல், போத்தனூர்-பொள்ளாச்சி, பொள்ளாச்சி-பாலக்காடு, கன்னியாகுமரி-திருவனந்தபுரம், விழுப்புரம்-தஞ்சாவூர், மயிலாடுதுறை-திருவாரூர், திருவாரூர்-காரைக்குடி, நீடாமங்கலம்-மன்னார்குடி, திருச்சி- ராமேஸ்வரம், மதுரை-மானாமதுரை, விருதுநகர்-தென்காசி, மதுரை-திருமங்கலம், வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி ஆகிய வழித்தடங்களில் ரயில்பாதைகளை மேம்படுத்தி, ரயில் வேகத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை – ஜோலார்பேட்டை மணிக்கு 130 கி.மீ. வேகத்திலும், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் ஜோலார்பேட்டை – கோயம்புத்தூர் பாதையில் மணிக்கு 130 கி.மீ. வேகம் வரை ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பயண நேரம் குறையும். ரயில் வழித்தடத்தில் வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை குறைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக, தண்டவாளம் மற்றும் சிக்னல் முறையை மேம்படுத்துதல், வேகக் கட்டுப்பாடுகளை அகற்றுதல், பாலங்களை சீரமைத்தல், மேம்பாலம் மற்றும் சுரங்கம் கட்டுமானப் பணிகளை செய்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி