133 பகுதிகள் மழையால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 64 மண்டலக்குழுக்கள்:  கட்டணமில்லா தொலைபேசி எண்களில் புகார் கூறலாம்செய்தியாளர் சந்திப்பில் கலெக்டர் தகவல்

திருவள்ளூர், செப்.30: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்டத்தில் 64 மண்டலக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 133 பகுதிகள் மழையால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. கட்டணமில்லா தொலைபேசி எண்களில் மக்கள் புகார் கூறலாம் என்று செய்தியாளர் சந்திப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து துறைகள் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேசியதாவது:- திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மாவட்டத்தில் மிகவும் அதிகமாக பாதிப்பு ஏற்படும் 8 பகுதிகள், அதிகளவில் பாதிப்பு ஏற்படும் 39 பகுதிகள், மிதமாக பாதிப்பு ஏற்படக்கூடிய 44, குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய 42 பகுதிகள் என மொத்தம் 133 பகுதிகள் மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு மேற்படி பகுதிகளுக்கு பல்வேறு துறைகள் அடங்கிய 64 மண்டலக்குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். இதில், முன்னெச்சரிக்கை குழுவில் 9 உறுப்பினர்கள் கொண்ட 1 குழுவும், தேடுதல் மற்றும் மீட்பு குழுவில் 12 உறுப்பினர்கள் கொண்ட 6 குழுவும், வெளியேற்றுதல் குழுவில் 31 உறுப்பினர்கள் கொண்ட 3 குழுவும், தற்காலிக தங்கும் முகாம் குழுவில் 27 உறுப்பினர்கள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில் 4,480 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 500 தன்னார்வலர்களுக்கு ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையில் பயிற்சி பெற்ற 56 அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

பொதுமக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு புயல் பாதுகாப்பு மையங்கள் வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி ஆகிய 2 இடங்களிலும், பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், திருப்பாலைவனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம், எளாவூர் -1 மற்றும் எளாவூர் -2 (மெதிப்பாளையம்) ஆகிய 5 இடங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளன. 660 தற்காலிக தங்குமிடங்களும் தயார் நிலையில் உள்ளன. கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்க 64 தற்காலிக தங்குமிடம் மற்றும் 144 முதல்நிலை பொறுப்பாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். சுகாதாரத்துறை வாயிலாக 42 மருத்துவக் குழுக்கள், அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வசதி தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் 355.67 கி.மீ தொலைவிற்கு மழைநீர் வடிகால்வாய் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுபாலங்கள் 3,070 மற்றும் பாலங்கள் 56 சுத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள ஆரணியாறு வடிநில கோட்டம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தின் ஏரிகளுக்கு நீர்வரத்து கால்வாய்கள், நீர் வெளியேறும் கால்வாய் மற்றும் நீர்நிலைகளில்; உள்ள நீர் வரத்து தங்கு தடையின்றி வெளியேற கால்வாய்களில் உள்ள அடைப்புகள் நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது 19,340 மீட்டர் தொலைவிற்கு தூர்வாரும் பணிகள் முடிவுற்றது.

மேலும், பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அரசால் அறிவிக்கப்படும்; வெள்ளம் மற்றும் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை செய்திகளை அறிந்து அதன்படி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்டத்தில் பொது மக்கள் மழை தொடர்பாக தங்கள் புகார்களை தெரிவிக்க மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா தொலைபேசி எண்.1077ஐ 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும், கட்டுப்பாட்டு அறை 044-27664177, 044-27666746-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம், மேலும், வாட்ஸ் அப் எண் 9444317862 மற்றும் திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் வெங்கட் வத்ஸ் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
திருவள்ளூர் கோட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கோட்ட பொறியாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். உதவி கோட்ட பொறியாளர்கள் தஸ்நாவிஸ் பெர்னான்டோ, ஆண்டி, பரமேஷ் குமார், அன்பரசு உதவி பொறியாளர்கள் பிரசாந்த், பிரவீன், சந்திரசேகர், சுரேஷ், பாரதிதாசன், ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழிப்புணர்வு முகாமில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்பவர்களிடம் வழங்கி சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார். இதில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார். இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சாலை ஆய்வாளர்கள் சீனிவாசன், அசோகன், செல்வராஜ், கோபி, ஜெபாஸ்டின், சசிகலா, தேன்மொழி, உமா, ரவி, கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

63 ஆயிரம் மணல் மூட்டைகள்
மாவட்டத்தில் 63 ஆயிரத்து 480 மணல் மூட்டைகள், 5,110 சவுக்கு மரக்கம்பங்கள், பொக்லைன் இயந்திரங்கள் 48, மின் அறுவை ரம்பங்கள் 96, கயிறுகள் 156, படகுகள் 86, அதி நவீன நீர் உறிஞ்சும் இயந்திரம் 6, ஜெனரேடர் 135, தண்ணீர் லாரிகள் 64, நீர் இறைக்கும் பம்புகள் 188, பீளிச்சிங் பவுடர் 4.3 மெ.டன், தார்பாய்கள் 64, டார்ச் லைட்கள் 210, மின்கம்பங்கள் 1,004, மின் மாற்றிகள் 180 ஆகியவை தயார் நிலையில் உள்ளன.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்