127வது வார்டு அலுவலகத்திற்கு ரூ.1.10 கோடியில் புதிய கட்டிடம்: சிதிலமடைந்த கட்டிடம் அகற்றம்

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சி, 10வது மண்டலத்திற்கு உட்பட்ட 127வது வார்டு அலுவலகம், கோயம்பேடு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம், தூய்மை பணியாளர் அலுவலகம், இரவு நேர காப்பக அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன. சுமார் 40 ஆண்டு பழமையான இந்த கட்டிடம், சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால், இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து சென்றனர். எனவே, இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக, மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பேரில், ரூ.1.10 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து, தற்போது சிதிலமடைந்த வார்டு அலுவலகத்தை பொக்லைன் இயந்திரம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இடிபாடுகளை அகற்றிய பின்னர், கட்டுமான பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது