உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். இந்த ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.

ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா பேச்சைக் கேட்க கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் உத்தரவிட்டுள்ளார். ஹாத்ரஸ் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது ஹாத்ரஸில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு மக்களவையில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உத்தரப்பிரதேச அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. மீட்புப் பணிகளில் உத்தரப்பிரதேச அரசுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

* இந்த சம்பவம் குறித்து உத்தரப்பிரதேச அமைச்சர் சந்தீப் சிங் கூறுகையில், “ஹத்ராஸ் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று இந்த விவகாரத்தை ஆய்வு செய்து, அரசு சார்பில் தேவையான முடிவுகளை எடுக்குமாறு முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

* மேலும் ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறுகையில், “மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மக்கள் இன்னும் மீட்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஹத்ராஸில் நடந்த ஆன்மிகக் கூட்டத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன். இந்த கடினமான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறேன்

 

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு