உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

புதுடெல்லி: உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவத்தை அடுத்து ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டம் சிக்கந்தரராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த மதவழிபாடு, ஆன்மிக சொற்பொழிவு கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 121 பேர் உயிரிழந்தனர். 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சிக்கந்தரராவ் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கூட்டத்தின் முக்கிய அமைப்பாளரான தேவ்பிரகாஷ் மதுகர் மற்றும் பெயர் தெரியாத சிலர் மீது புகார்கள் பதிவாகி உள்ளன. இதன்படி வெறும் 80,000 பேர் கூடுவதற்காக மட்டுமே அனுமதி பெறப்பட்டிருந்தது. ஆனால், 2.5 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105, 110, 126 (2), 223 மற்றும் 238 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவாகி உள்ளன. எனினும், நிகழ்ச்சிக்கு முக்கிய காரணமான போலே பாபா சாமியார், சம்பவத்தில் நேரடி தொடர்பு இல்லாததால் அவரது பெயர் முதல் தகவல்அறிக்கையில் சேர்க்கப்படவில்லை. சம்பவம் நடைபெற்ற சில நிமிடங்களிலேயே போலே பாபா தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து உ.பி. முதல்வரான யோகி ஆதித்யநாத் கூறும்போது, ‘இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் ஆழமாக தோண்டி பிடித்து தண்டிக்கும். எவரும் தப்ப முடியாது. இந்த சம்பவம் ஒரு விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா? என முழு விசாரணைக்கு பிறகு தெரியும். மேலும் விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார். தலைமறைவான போலே பாபா மீது பாலியல் புகார் உள்ளிட்ட பல வழக்குகளும் பதிவாகி நடைபெற்று வருகின்றன.

இவை, உ.பி.யின் ஆக்ரா, எட்டாவா, காஸ்கஞ்ச், பரூகாபாத் நகரங்கள் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திலும் பதிவாகியுள்ளன. இதில் ஒரு வழக்கில் போலே பாபா, சில நாட்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனும் பெற்றுள்ளார். இந்த சர்ச்சைகளையும் மீறி போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவிற்கு மயங்கி, லட்சக்கணக்கில் பக்தர்கள் சேர்கின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தை அடுத்து ஆக்ரா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 சத்சங்க நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று முதல் 11ம் தேதி வரை சயான் நகரிலும், வரும் 13 முதல் 23ம் தேதி வரை சாஸ்த்திரிபுரத்திலும் போலே பாபாவின் சத்சங்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவைகள்தான் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக 3 பேர் கொண்ட நீதித்துறை ஆணையத்தை அமைத்தார்.

 

Related posts

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு