12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தில் உயர்மட்ட குழு அமைக்கப்படும்: பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!!

சென்னை: 12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே சட்டப்பேரவையில் 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்ற வழிசெய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொழில் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு சட்டப்பேரவையில் காங்கிரஸ், இந்திய கம்யூ., மதிமுக, மமக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தொடர்ந்து சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, 12 மணி நேர வேலை மசோதா விவகாரத்தில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். தன்னார்வ அடிப்படையில் 12 மணி நேரம் வேலை செய்வதாக கூறுவோருக்கு மட்டுமே சட்டம் பொருந்தும். தொழிற்சாலைகளில் நெகிழ்வுத்தன்மை வரவேண்டும் என்பதற்காக சட்டம் கொண்டுவரப்படுகிறது. ஒன்றிய அரசு கொண்டு வந்ததற்காக இதை கொண்டு வரவில்லை; குறிப்பிட்ட சில தொழிலுக்கு மட்டுமே இது பொருந்தும். வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன என்று தெரிவித்தார்.

இதேபோல் தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார். வாரத்துக்கான 48 மணி நேரவேலையை 4 நாளில் முடித்தபின் 5வது நாளில் வேலைசெய்ய விரும்பினால் கூடுதல் சம்பளம் வழங்கப்படும். விரும்பக்கூடிய தொழிலாளர்கள், தொழிற்சாலைகளுக்கு மட்டுமே புதிய சட்டம் பொருந்தும் என்று தெரிவித்தார். 12 மணி நேர வேலைக்கான சட்டமசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து சிபிஎம், விசிக கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு