12 ஆண்டு மக்களின் கனவு இன்று நிறைவேறுகிறது: முத்துப்பேட்டை தனி தாலுகா உதயம்

முத்துப்பேட்டை, ஏப். 6: மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, முத்துப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகாவாக செயல்படும் என கடந்த 2011ம் ஆண்டு திமுக ஆட்சியில், அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டது. இதில் எந்தெந்த கிராமங்களை சேர்க்க வேண்டும் என்ற ஒரு வரைவுபட்டியலும் தயார் செய்யப்பட்டது. இந்நிலையில், அப்போது 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வந்துவிட்டது. தேர்தலுக்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக, இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது. இந்நிலையில், தனி தாலுகா திட்டத்தின் அவசியம் குறித்து, 2013ம் ஆண்டு திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன், கவன ஈர்ப்பு பேச்சுக்கு பின்னர் அதிமுக அரசு 2013ம் ஆண்டு இதற்கான அரசாணை வெளியிட்டதுடன், மன்னார்குடி தாலுகாவில் பாலையூர் பிர்காவில் உள்ள 18 வருவாய் கிராமங்களும், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் இடம் பெற்றுள்ள முத்துப்பேட்டை பிர்காவுக்கு உட்பட்ட 15 வருவாய் கிராமங்களையும் இணைத்து புதிய தாலுகா செயல்படும் என 20.2.2013ல் அரசாணையையும், இதை தொடர்ந்து அரசிதழிலும் வெளியிட்டனர்.

அந்த அரசாணையில், முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டிய தாசில்தார் உள்ளிட்ட பணியிடங்களையும் அறிவித்தனர். அதுபோல், தாலுகா அலுவலகம் கட்டுவதற்கு, தற்போது முத்துப்பேட்டை கோயிலூர் பைபாஸ் உள்ள பகுதியில் இடம் ஒதுக்கீடும் பெறப்பட்டது. அரசியல் காரணங்களால் தாலுகா பணிகள் நடைபெறாமல், அதிமுக அரசு முடக்கி வைத்திருந்தது. சென்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில், முத்துப்பேட்டை தனி தாலுகா அறிவிப்பு ஆட்சிக்கு வந்ததும் நடைமுறை படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கியது. முத்துப்பேட்டை ஆஸ்பத்திரி தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தில் தற்காலிகமாக தாலுகா அலுவலகம் இயங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, தாலுகா அறிவிப்பை காலதாமதம் படுத்தாமல் கூடிய சீக்கிரமே அறிவித்தால் பயனாக இருக்கும் என தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தார். அதன்படி, சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு சார்பில், முத்துப்பேட்டையை தனி வட்டமாக அறிவித்து, அதற்கான அரசாணையை வெளிட்டது.

இதில் முத்துப்பேட்டை குறு வருவாய் வட்டத்தில் 18 கிராமங்கள், மன்னார்குடி வட்டத்தில் உள்ள பாலையூர் குறு வருவாய் வட்டத்திலிருந்து 15 கிராமங்கள் என 43 வருவாய் கிராமங்கள் ஒன்று சேர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் தாசில்தார், தனி தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் என பிற வட்டங்களிருந்து 15பணியிடங்களும் புதியதாக 26 பணியிடங்களும் என மொத்தம் 41 பணியிடங்கள் நிரப்ப பட்டுள்ளது எனவும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த அறிவிப்பை நடைமுறைபடுத்தும் விதமாக, இன்று முதல் முத்துப்பேட்டை தனி தாலுகா செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து இன்று காலை சுமார் 9.30 மணியளவில் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

அதற்கான ஏற்பாடுகளை முத்துப்பேட்டை ஆஸ்பத்தி தெருவில் உள்ள தனியார் கட்டிடத்தில் அலுவலகம் செயல்பட தற்போது புதிய தாசில்தார் நியமனம் செய்யப்பட்டுள்ள மகேஷ்குமார், வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறனர். இந்நிலையில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு, அதிமுக ஆட்சியால் முடக்கி வைக்கப்பட்டு, தற்போது 12 ஆண்டுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் முத்துப்பேட்டையை தனி தாசில்தார் துவக்கி வைப்பதை கொண்டு இப்பகுதி மக்கள் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தற்போதைய தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் நன்றி கூறி வருகின்றனர். காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை