12 எஸ்ஐக்கள் உள்பட 60 போலீசார் பணியிட மாற்றம் திருவண்ணாமலை எஸ்பி உத்தரவு சாராய விற்பனையை தடுக்க அதிரடி

திருவண்ணாமலை, ஜூன் 27: திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 60 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி விஷ சாராயம் குடித்த ஏராளமானோர் கண் பார்வை பாதிப்பு, வயிற்றுவலி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஜிப்மர், சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 59 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்கள் மற்றும் விற்பவர்களை கைது செய்து வருகின்றனர். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நடத்திய சோதனையில் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 1,500 லிட்டருக்கும் மேல் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து, போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 12 சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்பட 60 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்பி கார்த்திகேயன் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு சென்று உடனடியாக பொறுப்பேற்க என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை