11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் ஜூலையில் தமிழ்நாடு முதல்வரின் திறனாய்வு தேர்வு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு ஜூலை மாதம் நடக்க இருப்பதை அடுத்து, பள்ளி மாணவர்கள் ஜூன் 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21ம் தேதி நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 2023-2024ம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்து தற்போது பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த தேர்வு எழுத விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

இந்த தேர்வில் 1000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ₹10 ஆயிரம் வீதம் ( ஒரு கல்வி ஆண்டில் 10 மாதங்களுக்கு மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையிலான இரண்டு தாள்கள் கொண்ட தேர்வுகள் நடத்தப்படும். மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பப் படிவங்களை இம்மாதம் 11ம் தேதி முதல் 26ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேர்வுக் கட்டணம் ₹ 50 சேர்த்து இம்மாதம் 26ம் தேதிக்குள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம், தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஒப்படைக்க வேண்டும்.

Related posts

வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு

ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது எம்பாம்வேயின் பிரான்ஸ் அணி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்