எல்லை தாண்டி வந்ததாக 11 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்


நாகை: எல்லை தாண்டி வந்ததாக கூறி, நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களது விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டது. நாகை அக்கரைபேட்டையை சேர்ந்த தம்பதி பழனிசாமி-சாந்தி. இவர்களுக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த நாகரத்தினம்(25), சஞ்சய்(23), பிரகாஷ்(35), சிவராஜ்(45), ராஜேந்திரன்(45), சுதந்திர சுந்தர்(40), சந்துரு(23), ரமேஷ்(47), வர்ஷன்(20), சுமன்(25), ஆனந்தவேல்(25) ஆகிய 11 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே 41 நாட்டிகல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, 11 பேரையும் கைது செய்தனர்.

விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 11 பேரும் இலங்கை காங்கேசன்துறைக்கு நள்ளிரவு அழைத்துச் செல்லப்பட்டு, யாழ்ப்பாணம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் பருத்தி துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகை மீனவர்களிடையே சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தடை காலம் முடிந்து கடலுக்கு சென்றது முதல் அதிகளவில் மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

திமுக பவளவிழா: தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து