சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரை மெட்ரோ நிலையங்கள், வழித்தடம் அமைக்க ரூ.1,134 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: சோழிங்கநல்லூர் முதல் சிறுசேரி சிப்காட் வரை உயர்மட்ட வழித்தடம், மெட்ரோ நிலையங்கள் அமைப்பதற்கு ரூ.1,134 கோடி மதிப்பில் விகாஸ் நிகம் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளது. சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு பயன்பாட்டில் உள்ளது. சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையும் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இதில், 3வது வழித்தடமான மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில், சோழிங்கநல்லூர் முதல் சிப்காட் வரையிலான 10 கிமீ நீள உயர்மட்ட வழித்தடம் மற்றும் 9 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கு ரூ.1,134.11 கோடி மதிப்பில் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இது சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ம் கட்டத்திற்கான கடைசி உயர்மட்ட வழித்தட ஒப்பந்தம் ஆகும். சோழிங்கநல்லூர் ஏரி- பொன்னியம்மன் கோயில், சத்தியபாமா பல்கலைக்கழகம், செம்மஞ்சேரி, காந்தி நகர், நாவலூர், சிறுசேரி, சிறுசேரி சிப்காட் -1 மற்றும் சிறுசேரி சிப்காட்-2 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகிறது.

இதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் மற்றும் ரயில் விகாஸ் நிகம் நிறுவ முதுநிலை துணைப் பொது மேலாளர் சவுத்ரி ரஜ்னீஷ் குமார் சிங் ஆகியோர் நேற்று கையெழுத்திட்டனர். இன்னும் சில ஆண்டுகளில் ஓஎம்ஆர் சாலை மெட்ரோ ரயில்களுக்கான முக்கிய சந்திப்பு மையமாக அமையும். 2ம் கட்ட திட்டம் முடிவடைந்தவுடன், சோழிங்கநல்லூரிருந்து கிழக்கு கடற்கரை சாலைக்கும் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கத்திலிருந்து வேளச்சேரி வரை நீட்டிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஓஎம்ஆர் மெட்ரோ ரயில் சந்திப்பு அமைந்த பின்னர் ஈசிஆர் அல்லது வேளச்சேரிக்கு செல்வது 50% முதல் 80% வரை பயண நேரம் குறையும்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி