113 மாத சம்பள நிலுவை தொகை கேட்டு புதுவை பாசிக் ஊழியர்கள் சட்டசபையை முற்றுகை

புதுச்சேரி: புதுவை அரசின் கூட்டுறவு நிறுவனமான பாசிக் ஊழியர்களுக்கு கடந்த 113 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் வறுமையில் வாடி வரும் பாசிக் ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பாசிக் ஊழியர்கள் கடந்த 15 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை ஏஐடியுசி செயலாளர் சேதுசெல்வம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாசிக் ஊழியர்கள் சட்டமன்றத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். காமராஜர் சாலை பிள்ளைத்தோட்டம் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பிருந்து தொடங்கிய பேரணி ராஜா திரையரங்கம், நேரு வீதி, மிஷன்வீதி வழியாக சென்றது. அங்குள்ள ஜென்மராகினி மாதா கோவில் அருகே பெரியகடை போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினார். இதையடுத்து போராட்டக்காரர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றதால் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை கைது செய்து கரிக்குடோன் கொண்டு சென்றனர்.

இதற்கிடையே அங்குள்ள மற்றொரு பாதையில் போராட்டக்காரர்கள் சுற்றி வந்து ஆம்பூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் ஆம்பூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களும் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டு கரிக்குடோன் கொண்டு செல்லப்பட்டனர். இரண்டு இடங்களிலும் மொத்தம் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி

தமிழ்நாட்டில் இன்னும் 10 ஆண்டுகளில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை 100% ஆகும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி