11 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் கூலித்தொழிலாளி போக்சோவில் கைது ஆரணி அருகே

ஆரணி, ஜூலை 4: ஆரணி அருகே 11 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 11, 10, 7 வயதில் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 3 பேரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மே மாதம் 27ம் தேதி தொழிலாளியின் மனைவியும், அவரது 3 குழந்தைகளும் திடீரென மாயமானதால் ஆரணி தாலுகா போலீசில் கணவர் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 குழந்தைகளுடன் மாயமானவரை தேடிவந்தனர். விசாரணையில், ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி யுவராஜ்(35) என்பவருக்கும் குழந்தைகளுடன் மாயமான பெண்ணுக்கும் தகாத உறவு இருந்துள்ளது. சம்பவத்தன்று யுவராஜ் கூலித்தொழிலாளியின் மனைவி மற்றும் அவரது 3 குழந்தைகளை சென்னைக்கு அழைத்து சென்று கோயம்பேடு பகுதியில் வீடு வாடகை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தாலுகா போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்று யுவராஜிடம் இருந்து 3 குழந்தைகள் மற்றும் அந்த பெண்ணை மீட்டு கூலித்தொழிலாளியிடம் ஒப்படைத்தனர். அனைவரும் வீட்டில் இருந்து வருகின்றனர். இதற்கிடையில், 3 பெண் குழந்தைகளில் 11 வயதுள்ள சிறுமிக்கு கடந்த சில தினங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அவரது பாட்டி விசாரிக்கையில், சென்னையில் இருந்தபோது 10 நாட்களுக்கு மேலாக தினமும் யுவராஜ் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து தெரியவந்தது.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பாட்டி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து யுவராஜை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து யுவராஜை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை