கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செம்மொழி பூங்காவில் 10 நாள் பிரம்மாண்ட மலர் கண்காட்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி செம்மொழி பூங்காவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் இந்தாண்டிற்கான மலர் கண்காட்சியை நடத்த தோட்டக்கலைத்துறை தரப்பில் திட்டமிடப்பட்டது. அதன்படி, குளிர் பிரதேசங்களில் மட்டுமே பூக்கும் பெட்டுனியா, சால்வியா, செவ்வந்தி, பெகோனியா, பெண்டாஸ், டயாந்தஸ், ஜினியா, டொரினியா, லில்லியம், கேலாண்டுலா, வெர்பினா உள்ளிட்ட 26 வகையான வண்ண மலர்களும், ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து என 12 லட்சம் வண்ண மலர்கள் இந்த கண்காட்சிக்காக இறக்குமதி செய்யப்பட்டன. மேலும், இந்த பூக்கள் மூலமாக கண்களை கவரும் மலர் அலங்காரங்கள், வளைவுகள் மற்றும் வண்ணமலர் படுக்கைகள், பொம்மைகள், படகு, கடிகாரம், யானை, அன்னப்பறவை, வண்ணத்துப்பூச்சி, ஆமை போன்ற 18 வகையான உருவங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. மலர் கண்காட்சியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.

காண்போரை கவரும் வகையில் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியை காண பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வந்திருந்து மலர் கண்காட்சியை கண்டு புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். மேலும், 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த கண்காட்சியை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்க்கலாம். இதற்கான நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 வசூலிக்கப்பட உள்ளது. கடந்த 2010ல் 8 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பார்வையாளர்கள் வரை கண்டுகளிக்கலாம். கடந்த முறை கலைவாணர் அரங்கத்தின் நடந்த மலர் கண்காட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு பார்வையிட்ட நிலையில் இந்தாண்டு அதற்கும் கூடுதலாக பொதுமக்கள் வரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடக்க விழாவிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், வேளாண் துறை செயலர் அபூர்வா, உழவர் நலன் துறை செயலர் சங்கர், வேளாண்மை விற்பனை துறை ஆணையர் பிரகாஷ், வேளாண் இயக்குநர் முருகேஷ், தோட்டக்கலை துறை இயக்குநர் குமரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்