109வது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்: கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை திறமையாக கையாண்டவர்

சென்னை: சென்னை மாநகர காவல்துறைக்கு 109வது போலீஸ் கமிஷனராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது பணிக்காலத்தில் கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை சிறப்பாக கையாண்டு, குற்றவாளிகளை கைது செய்தவர். சென்னை மாநகர காவல்துறையின் 109வது கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கடந்த 16.2.1968ம் அண்டு சந்தீப் ராய் ரத்தோர் பிறந்தார். பி.ஏ வரலாறு முடித்த அவர், 1992ம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். அதன் பிறகு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ போலீஸ் சையின்ஸ் கிரிமினாலஜி, சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் முதுநிலை பட்டமும் பெற்றார்.

கடந்த 1998ம் ஆண்டு கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்தார். அவரது பணிக்காலத்தில் அப்போது பாஜ தேசிய தலைவராக இருந்து எல்.கே.அத்வானி கோவை வந்தபோது, தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. அந்த குண்டு ெவடிப்பு சம்பவத்தை திறமையாக கையாண்டு குற்றவாளிகளை கைது செய்தனர். 1999ம் ஆண்டு டெல்லி திகார் சிறையில் கமாண்டண்ட் அதிகாரியாக பொறுப்பு வகித்தார். அப்போது திகார் சிறையில் முதன் முறையாக சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த சிறப்பையும் பெற்றவர். 2000ம் ஆண்டில் சென்னையில் போக்குவரத்து துணை கமிஷனராக பணியாற்றினார். 2001 -2002 ம் ஆண்டுகளில் உலக அமைதிக்கான சிறப்புக் காவல் படையில் பங்கேற்று தனது சிறப்பான பணிக்காக பதக்கம் வென்றவர்.

2003ம் ஆண்டில் தமிழ்நாடு சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த போது, முத்திரைத் தாள் மோசடி வழக்கை விசாரித்தார். 2005 ம் ஆண்டில் தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த போது, அம்மாவட்ட காவல் துறை முதன் முறையாக ஐ.எஸ்.ஒ. தரச்சான்றிதழ் பெற்றது. 2010ம் ஆண்டில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை டிஐஜியாகவும், 2016-2017 ம் ஆண்டில் தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும ஐஜியாகவும் பணியாற்றியவர். 2015ம் ஆண்டில் கேதர்நாத் வெள்ளம் மற்றும் மவுலிவாக்கம் கட்டிட விபத்தின் போது தேசிய பேரிடர் மீட்புக் படை தலைவராக இருந்து திறம்பட செயல்பட்டவர். தனது சிறப்பான பணிகளுக்காக 2008 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் ஜனாதிபதி விருதுகளை பெற்றார். 2017 முதல் 2019 வரை சிறப்பு அதிரடிப் படை தலைவராக நக்சலைட்களுக்கு எதிராக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் முக்கோண எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். 2019 முதல் 2021 வரை தமிழ்நாடு சிரூடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக சிறப்பாக பணியாற்றினார். அதைதொடர்ந்து திமுக ஆட்சியில் புதியதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகர ஆணையரகத்தின் முதல் கமிஷனராக சந்தீப் ராய் ரத்தோர் அமர்த்தப்பட்டார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆவடி மாநகர போலீஸ் கமிஷனராக சிறப்பாக பணியாற்றிய சந்தீப் ராய் ரத்தோர் கடந்த ேம மாதம் காவலர் பயிற்சி கல்லூரியின் டிஜிபியாக அமர்த்தப்பட்டார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி