1094 இடங்களில் விண்ணப்ப பதிவு முகாம்கள்

கிருஷ்ணகிரி, ஜூலை 20: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு, 1094 இடங்களில் விண்ணப்பங்கள் பதிவு முகாம், இரண்டு கட்டங்களாக நடக்கிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1094 ரேஷன் கடைகளில், 5 லட்சத்து 64 ஆயிரத்து 624 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான மனுக்கள் மற்றும் ஒப்புதல் ரசீது வழங்கப்படும். இதில் முதற்கட்டமாக பதிவு செய்யப்படும் நபர்களுக்கு மட்டும், இன்று (20ம் தேதி) முதல் வரும் 23ம் தேதி வரை, ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் ஒப்புதல் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக பதிவு செய்யும் நபர்களுக்கு, வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். ஒப்புதல் ரசீதில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரும் என்ன தேதியில், எந்த நேரத்தில் வரவேண்டும் என்ற விவரம் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்த விவரம் விற்பனையாளரால், விளம்பரப் பலகையில் எழுதி வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்ப பதிவு முகாமிற்கு ஒரு பொறுப்பு அலுவலர், ஒரு காவலர், ஒரு உதவி மைய தன்னார்வலர்கள், உதவி அலுவலர், ஒவ்வொரு 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு பதிவாளர் வீதம் பணியமர்த்தப்பட்டு, உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 584 இடங்களில், 823 பதிவாளர்கள் வரும் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை பதிவு செய்யவுள்ளனர். இரண்டாம் கட்டமாக 510 இடங்களில், 774 பதிவாளர்கள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாளை (21ம்தேதி) மற்றும் 22ம் தேதிகளில் முன்னோட்ட பதிவுகள் மேற்கொள்ள முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் மற்றும் வட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

மேலும், கட்டுப்பாட்டு அறைகளின் எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் 04343-234444, 233077, 1077. தாலுகா அலுவலகங்கள் கிருஷ்ணகிரி: 04343-236050, பர்கூர்: 04343-266164, போச்சம்பள்ளி: 04341-252370, ஊத்தங்கரை: 04341-220023, ஓசூர்: 04344-222493, சூளகிரி: 04344-292098, தேன்கனிக்கோட்டை: 04347-235041, அஞ்செட்டி: 04347-236411 ஆகியவை ஆகும். மேற்கண்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது குறைகளை பதிவிடலாம். குறைகள் அன்றைய தினமே உடனுடன் களைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வட்ட அளவில், கிருஷ்ணகிரி வட்டத்திற்கு கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கிருஷ்ணகிரி, பர்கூர்- மாவட்ட வருவாய் அலுவலர், போச்சம்பள்ளி – தனி மாவட்ட வருவாய் அலுவர், சிப்காட், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை – துணை கலெக்டர் (பயிற்சி), கிருஷ்ணகிரி, ஓசூர் – மாநகராட்சி ஆணையாளர், அஞ்செட்டி – தனி மாவட்ட வருவாய் அலுவலர், நிலவரித்திட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை – தனி மாவட்ட வருவாய் அலுவலர், தேசிய நெடுஞ்சாலை 948, கிருஷ்ணகிரி, சூளகிரி – சப் கலெக்டர் ஓசூர் என கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் மட்டும் வருகை தந்து, தங்களுடைய விண்ணப்பங்களை வழங்கி, இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்